×

மக்காச்சோள பயிர் காப்பீட்டிற்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் கலெக்டரிடம் விவசாயிகள் புகார்



விருதுநகர், ஜன. 8: மக்காச்சோள பயிர் காப்பீட்டிற்கான இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் அளித்தனர். இது குறித்து தமிழ்  விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி தலைமையில் விருதுநகர்  கலெக்டரிடம் விவசாயிகள் அளித்த மனு: வெம்பக்கோட்டை தாலுகா விஜயரெங்காபுரம் கிராமத்தை சேர்ந்த  விவசாயிகளுக்கு 2018-19ம் ஆண்டுக்கான மக்காச்சோள பயிர் காப்பீட்டிற்கான இழப்பீடு வழங்கப்படவில்லை. இதேபோல,
இதே தாலுகாவில் உள்ள ஏ.லட்சுமிபுரம் வருவாய்  கிராமங்களில் 8 கிராமங்களைச் சேர்ந்த மக்காச்சோள விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்  கூட இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும்  மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வரும் நிலையில்,  வெம்பக்கோட்டை தாலுகாவில் பல கிராமங்கள் விடுபட்டுள்ளன.

சாத்தூர்  தாலுகா இ.குமாரலிங்கபுரம் கிராம விவசாயிகள் மக்காச்சோளத்திற்கு 2018-19ல்  காப்பீடு செய்துள்ள நிலையில், குறைவான தொகையாக ரூ.3 ஆயிரத்து 500  ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற கிராமங்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட இ.குமாரலிங்கபுரம் கிராம விவசாயிகளுக்கு இழப்பீடு குறைவாக உள்ளது. எனவே, மாவட்ட  கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து மக்காச்சோள  விவசாயிகளுக்கும் முறையான நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...