×

பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு பல கிமீ நடக்கும் மாணவர்கள் வருசநாடு அருகே அவலம்

வருசநாடு, ஜன.8: வருசநாடு அருகே பஸ் வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே பசுமலைதேரி கோவிலாங்குளம், ஓட்டணை, சிங்கராஜபுரம், பூசனூத்து, புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் இதுவரையும் பஸ் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள் ஒவ்வொரு நாளும் ஆட்டோக்களில் 10 முதல் 20 ரூபாய் வரை கட்டணம் கொடுத்து பயணம் செய்கிறார்கள். இதனால் பணம் விரயம், காத்திருப்பது போன்ற மன உளைச்சலுக்கு பொதுமக்கள் ஆளாக்கப்படுகிறார்கள். எனவே கடமலைக்குண்டு முதல் மயிலாடும்பாறை வழியாக புதுக்கோட்டை மலைக்கிராமம் சுற்றி வருவதற்கு பஸ் போக்குவரத்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த கிராமவாசி ரமேஷ் கூறுகையில், தினமும் காலை முதல் மாலை வரை தனியார் வாகனங்களில் சென்று அல்லல்படுகிறோம். இதனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவது மட்டுமின்றி விவசாயிகளும் விவசாய பொருட்களை ஏற்றிச் செல்வதிலும் மிகுந்த சிக்கல் நிலவி வருகிறது. எனவே தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு பஸ் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்றார்.

Tags : school ,Varshanadu ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி