×

உள்ளாட்சி தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் மாநில நிதிக்குழு மானியம் கிடைக்குமா? அடிப்படை திட்டப்பணிகளுக்கு இதுதான் ஆணிவேர்

தேவாரம், ஜன.8: தேனி மாவட்டத்தில் அடிப்படை திட்டங்களை செய்வதற்கு ஆணிவேராக உள்ள மாநில நிதிக்குழு மானியம் கிடைக்காத நிலையில் கிராம பஞ்சாயத்துக்கள் தள்ளாடுகின்றன. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர், போடி, பெரியகுளம், தேனி, கடமலை மயிலை உள்ளிட்ட 8 ஊராட்சி ஒன்றியங்களில் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு தேர்தல் முடிந்து தலைவர்கள் பதவியேற்பும் முடிந்துவிட்டது. இந்நிலையில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை சுத்தம் செய்தல், அவசர கால நிதி செலவினங்களுக்காக மாநில நிதிக்குழு மானியம்(எஸ்.எப்.சி), பயன்படுத்தப்படும். கிராமங்களில் மக்கள் தொகை அடிப்படையில் தமிழக அரசினால் நேரடியாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனை கொண்டே பணியாளர்களுக்கு சம்பளம் கூட போடப்படுவது வழக்கம். இதனால் கிராமங்களில் தொய்வின்றி பணிகள் நடக்கும். மக்கள் குறைகள் பெருமளவில் தீர்க்கப்படும். கடந்த 3 வருடங்களில் இந்த நிதி பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிராம ஊராட்சிகளுக்கு இந்த நிதி பாதிக்கும் குறைவாக வருகிறது. மக்கள் தொகை அதிகம் இல்லாத ஊராட்சிகளில் வேலை பார்க்கும் ஊராட்சி செயலர், துப்புரவு பணியாளர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள் உள்ளிட்டவர்களுக்கு சம்பளம் கூட போடாத நிலையே தொடர்கதையாகி வருகிறது. இதனால் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தேனிமாவட்டத்தில் 80 சதவீத கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. இப்போது புதிதாக கிராம பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பொறுப்பேற்று உள்ளனர். இவர்கள் அடிப்படை வசதிகளை செய்து தருவோம் என்று கூறித்தான் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் கிராமங்களில் நிதி இருப்பே இல்லாமல் எப்படி அடிப்படை வசதியை செய்து தர முடியும் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக எஸ்.எப்.சி. நிதி இருந்தால்தான் கிராமங்கள் வளம் பெறும் என்ற நிலையில் இதனை எப்படி ஊராட்சி தலைவர்களுக்கு புரிய வைப்பது என்று ஊராட்சி செயலர்களும் திண்டாடுகின்றனர். எனவே உடனடியாக தேனிமாவட்ட கலெக்டர் மாநில நிதிக்குழு மானியம் கிடைத்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பதவி ஏற்பு முடிந்தவுடன் ஒரு சில பஞ்சாயத்துகளின் தலைவர்கள் நிர்வாகம் பற்றி அதிகாரிகளிடம் கேட்டனர். இதில் பெரும்பாலான பஞ்சாயத்துக்கள் வளர்ச்சி திட்டங்களை செய்ய போதிய நிதி இல்லாத ஜீரோ பேலன்ஸ் இருப்பதாக கூறியதால் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிதி ஆதாரத்தை பெருக்கிடவும், வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதிகளை பெறவும் இப்போதே திட்டங்களை தீட்டி களமிறங்க தயாராகி உள்ளனர்.

Tags : State Fund Committee ,elections ,
× RELATED மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு...