×

திருடர்கள் நடமாட்டம் அதிகரிப்பால் பீதி ரோந்து பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

பழநி, ஜன. 8: பழநி புறநகர் பகுதியில் மர்மநபர்கள், திருடர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பழநி புறநகரான திருநகர், நேதாஜி நகர், பழநியாண்டவர் நகர், புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக மர்மநபர்கள் மற்றும் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டிற்கு ஒரு வாலிபர் இரவு 10 மணிக்கு முகத்தை கர்சீப்பால் மூடியபடி கம்ப்யூட்டர் சரிசெய்ய வந்திருப்பதாக கூறி உள்ளார். வாசலில் இருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் கவனித்த வீட்டில் இருந்தவர்கள், கதவை திறக்காமலேயே பதில் கூறி உள்ளனர்.மற்றொரு புறம் போலீசிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் உஷாரடைந்த அந்நபர் வெளியில் தயாராக நின்றிருந்த மற்றொரு நபருடன் டூவீலரில் தப்பி ஓடிவிட்டார். இதுபோல் நேற்று அதிகாலை திருநகரில் ரங்கசாமி என்பவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் வீட்டில் இருந்த 5 செல்போன்களை எடுத்து கொண்டு தப்பி ஓடி உள்ளார். சத்தம் கேட்டு விழித்து கொண்ட வீட்டில் உள்ளவர்கள் விரட்டி சென்றுள்ளனர். ஆனால், அதற்குள் அந்நபர் தப்பி ஓடிவிட்டார்.பழநி புறநகரில் அதிகரித்திருக்கும் திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே போலீசார் பழநி புறநகர் பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென்றும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : thieves ,
× RELATED செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற...