×

கண்துடைப்பாய் போன அரசு உத்தரவு தடை பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் தாராளமாக புழக்கம்

சிவகங்கை, ஜன. 8:  சிவகங்கை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் தாராளமாக புழக்கத்தில் உள்ளதால் தடை கண்துடைப்பாய் போனது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஜன.1முதல் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் டீ கப், பிளாஸ்டிக் கொடி உள்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவற்றை பயன்படுத்தும் கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் நடந்தன. சிவகங்கை மாவட்டத்திலும் கடந்த ஆண்டில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர் வகையிலான சிறிய, பெரிய கப்புகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் சில நாட்கள் எடுக்கப்பட்டன.
உணவு பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நகரங்களில் உள்ள நிறுவனங்கள், கடைகள் ஆகிய இடங்களில் சோதனை செய்து அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல் வாரச்சந்தை, தினசரி சந்தைகளில் காய்கறிகள், பொருட்கள் வழங்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரு வாரம் மட்டும் மாவட்டம் முழுவதும் சுமார் 5 டன் அளவிலான பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், நீர் குடிக்கும் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் அதன்பிறகு பறிமுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது.  இதனால் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பொருட்கள் வழக்கம்போல் பயன்பாட்டில் உள்ளன. பெரிய வர்த்தக நிறுவனங்களில் மட்டும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யவில்லை. இவைகள் தவிர கடைகள், சந்தைகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மீண்டும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டீக்கடைகளில் சில நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்த பேப்பர் கப்புகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

டாஸ்மாக் பார்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகளும் சில நாட்கள் மட்டும் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் புழக்கத்தில் வந்துள்ளன. எனவே பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ‘பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் முன்பு போல் புழக்கத்தில் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை பொதுமக்கள் உணர்ந்து வேறு பொருட்களுக்கு மாற தொடங்கினர். ஆனால் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை புழக்கத்தில் விட்டுள்ளனர். இதனால் அரசின் தடை உத்தரவு சிவகங்கை மாவட்டத்தில் பெயரளவிற்கு மட்டுமே உள்ளது. முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED மது விற்றவர் கைது