×

காரைக்குடி அருகே 70 வயதில் தலைவராக பொறுப்பேற்ற மூதாட்டி அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது இலக்கு

காரைக்குடி, ஜன. 8:  காரைக்குடி அருகே 20 வருடங்களுக்கு தான் உறுப்பினராக இருந்த அதே ஊராட்சியில் 70 வயதில் தலைவராக பொறுப்பேற்ற மூதாட்டி அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார். காரைக்குடி அருகே கல்லல் யூனியன் வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவராக 70 வயது மூதாட்டி மங்கையற்கரசி என்பவர் பதவி ஏற்றுள்ளார். இவருக்கு ஒன்றிய பள்ளி ஆசிரியர் பிரிட்டோ பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்ஊராட்சிக்கு உட்பட்ட 6 வார்டு உறுப்பினர்களாக ராணி, பூபதி, வள்ளி, முத்துலட்சுமி, வேலு, இந்திராணி ஆகியோர் பதவியேற்று கொண்டனர். விழாவில் உடையப்பன், மணியன், பொறியாளர் நேதாஜிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்கையர்கரசி கூறுகையில், ‘20 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஊராட்சியில் வார்டு உறுப்பினராக இருந்தேன். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இந்த பகுதிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. அதனால் வயதானாலும் சரி வெற்றி பெற முடியும்  என கருதி இந்த முறை தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளேன். எனது கணவர் மற்றும் மகன்கள் ஊக்கப்படுத்தினார்கள். மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்றவற்றுக்கு முக்கியதும் தந்து நிறைவேற்றுவேன்’ என்றார்.

Tags : Muthatti ,Karaikudi ,
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க