×

திருக்கோஷ்டியூரில் உள்ள சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு


திருப்புத்தூர், ஜன. 8: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சொளமிய நராராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலில் மார்கழி உற்சவத்தில் பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி உற்சவம் 20 நாட்கள் நடைபெறும். கடந்த டிச.27ல் காலை பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி காப்புக்கட்டப்பட்டு, பகல் பத்து உற்சவம் துவங்கியது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சயனத்திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சிளித்தார்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். பின்னர் மாலை பெருமாள் ராஜாங்கம் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணியளவில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியாருடன் எழுந்தருள சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாள் நம்மாழ்வார்க்கும், பக்தர்களுக்கும் அருள்பாலித்தார்.

இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஏகாதசி மண்டபம் சென்று பத்தி உலாத்துதல் நடைபெற்றது. பின்னர் மங்களாசாசனம் முடிந்து தென்னைமரத்து வீதி புறப்பாடு நடைபெற்று கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்பாள் சன்னதியில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமி தேவியாருடன் எழுந்தருளி காப்புக்கட்டப்பட்டு இரவுப்பத்து உற்சவம் துவங்கியது. இரவுப்பத்தில் தினசரி மாலை 6 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து தென்னமரவீதி புறப்பாடாகி தயார் சன்னிதியில் எழுந்தருளல் நடைபெறும். 10ம் திருநாளான ஜன.15ம் தேதியன்று காலையில் சுமார் 9 மணி முதல் 10 மணிக்குள் சொர்க்கவாசல் திறந்து, பின்னர் பத்தி உலாத்தல் நடைபெறும். தொடர்ந்து பெருமாள் அம்பாள் சன்னதியில் எழுந்தருளிய பின் அபிஷேக தீபாராதனை நடைபெற்று காப்பு அவிழ்க்கப்படும். மாலை ஆழ்வார் திருவடி தொழுதலும், விஷேச பூஜைகளும் முடிந்த பின்னர் இரவு ஆஷ்தானம் எழுந்தருளல் நடைபெற்று இரவு பத்து உற்சவம் பூர்த்தியடையும்.

Tags : Opening Ceremony ,Soumya Narayana Perumal Temple ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா