×

‘பயத்துக்கே பயம் காட்டிய ஆளு’

தனது ஆயுத பலத்தால் உலக நாடுகளை எல்லாம் அரட்டி வருகிறது அமெரிக்கா. ஆனால் அந்த அமெரிக்காவையே அரட்டிக் கொண்டிருக்கிறார் ஒரு குட்டி நாட்டின் ஜனாதிபதி. அவர் வேறு யாருமல்ல வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்தான். இவரது 37வது பிறந்தநாள்தான் இன்று. கிம் ேஜாங் உன், தனது தந்தையின் மூன்றாவது மனைவி கோ யோங் ஹூயிற்கு 1983ம் ஆண்டு ஜன.8ம் தேதி பிறந்தார். வடகொரியா மக்களிடம், குறிப்பாக அமெரிக்காவின் கண்களில் படாமல் சுவிட்சர்லாந்தில் உள்ள பள்ளியில் இவரை படிக்க வைத்தார் தந்தை கிம் ஜோங் இல். அங்கு தனது அத்தையின் பாதுகாப்பில் வளர்ந்தார் கிம். இவர் ஒரு வடகொரிய அதிபரின் மகன் என பள்ளியில் யாருக்கும் தெரியாது. மிகவும் கூச்ச  சுபாவம் நிறைந்தவராக, பனிச்சருக்கு, கூடைப்பந்து ஆகியவற்றில் ஆர்வம்  கொண்டிருந்தார். கணினி பொறியியல், இயற்பியல்(அணுகுண்டு தயாரிக்க முக்கியம் இல்லையா?) ஆகிய துறைகளில் பட்டப்படிப்பை முடித்தார்.
அதன்பிறகு வடகொரியாவிற்கு வந்தவர் ராணுவ பள்ளியில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அப்போதுதான் இவரது முகம் வடகொரிய மக்களிடம் பரீட்சயமானது. பார்ப்பதற்கு தனது தாத்தாவும் மக்களின் மகத்தான செல்வாக்கு பெற்றவருமான வடகொரியாவின் முதல் ஜனாதிபதியுமான கிம் இல் சுங் போன்றே இவரது தோற்றம் இருந்தது. இதனால் இவரை பார்த்தவுடனேயே வடகொரிய மக்களுக்கு பிடித்து போய்விட்டது. அப்போதே இவர்தான் தங்களின் அடுத்த தலைவன் என முடிவு செய்துவிட்டனர். இதனால் மக்களிடையே இவரது செல்வாக்கு நாளுக்கு நாள் கூடியது.

இதனிடையே கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி இவரது தந்தை கிம்  ேஜாங் இல் திடீரென மரணமடைந்தார். இறுதிச்சடங்கு முடிந்த சில நாட்களிலேயே,  மக்களின் பேராதரவு இருந்ததால் கிம் ஜோங் உன் வடகொரியாவின் 3வது ஜனாதிபதியாக, தனது 28வது வயதில் பொறுப்பேற்றார். பிறந்தது முதல் வெளிநாட்டிலேயே படித்து வளர்ந்த இவரால் எப்படி வடகொரியாவை வழிநடத்த முடியும்? அதிலும் வடகொரியாவை கண்கொத்தி பாம்பாக போட்டுத்தாக்க நேரம் பார்த்து வரும் அமெரிக்காவிடம் இருந்து எப்படி நாட்டை காப்பாற்றுவார், மக்களை காப்பாற்றுவார், கம்யூனிச கொள்கையை தடம் பிறழாமல் வழிநடத்தி செல்வாரா என்று, வடகொரிய அரசின் மூத்த தலைவர்களே சந்தேகப்பட்டனர். இதுபோக, சின்ன பையனாக இருக்கிறான்; ஏதாவது குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என்று அமெரிக்காவும் சில சித்து வேலைகளில் இறங்கியது.

ஆனால் அவர்களின் எண்ணத்தை, கனவுகளை எல்லாம் தவிடு பொடியாக்கி, வடகொரியாவை தனது தாத்தா, தந்தை காலத்தை காட்டிலும் கிம் ேஜாங் உன் திறம்பட நிர்வகித்து வருகிறார் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். குறிப்பாக, ராணுவத்தின் கட்டுக்கோப்பான செயல்பாடு, ஊழல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை(ஊழல் செய்தவர்களை சுட்டு தள்ளியதும், ‘பிரானா’ மீனுக்கு இரையாக்கியதும் நினைவிருக்கலாம்), ரஷ்யா, சீனாவுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தியது, தொழிலாளர் கட்சியில் சிறப்பான  பங்களிப்பு, வளைந்து கொடுக்காத மனப்பான்மை ஆகியவற்றின் மூலம் கிம் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வருவதாக கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக, 50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அதிபருடன் இவர் முன்னெடுத்த பேச்சுவார்த்தை வடகொரியாவை பொருளாதார ரீதியாக உயர்த்த வழிவகுத்துள்ளது என்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்கா சில பொருளாதார தடைகளை மட்டுமே நீக்கியது. ஆனால் முழுமையாக நீக்கவில்லை. இது கிம்மை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகவும், மீண்டும் அணுகுண்டு சோதனைகள் நடத்தி அமெரிக்காவை பணிய வைக்க முயற்சிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
 
வடகொரியாவை பற்றி எப்போதுமே எதிர்மறை செய்திகளே வெளி வருவது வழக்கம். அப்படி சமீபத்தில் வந்த ஒரு செய்தியில், வடகொரியாவில் கடும் பஞ்சம், மனித உரிமை மீறல்கள் அதிக அளவில் நடைபெறுவதாகவும், 80,000 முதல் 1,20,000 வரையிலான அரசியல் கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிம் ஜோங் உன்னின் நெருங்கிய நண்பரும், அமெரிக்க கூடைப்பந்து வீரருமான டென்னிஸ் ரோட்மேன் இதற்கு நேர்மாறான தகவல்களை தெரிவிக்கிறார். இவர் அடிக்கடி வடகொரியாவிற்கு சென்று கிம்மை சந்தித்துவிட்டு வருபவர். ‘‘வடகொரிய மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பெற்று நிறைவான வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்கா விதித்த பொருளாதார தடைதான் அவர்களை பொருளாதார ரீதியாக சில சிக்கல்களில் தள்ளிவிட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் கிம் மீது அளவு கடந்த பாசமும் மரியாதையும் வைத்துள்ளனர்’’ என்று டென்னிஸ் ரோட்மேன் கூறுகிறார். யார் உண்மை சொல்கிறார்கள் என்று, வடகொரியாவிற்கு நாம் சென்று பார்த்தால்தான் தெரியும். அதுவரை அந்த மர்மம் விலகாது என்பது மட்டுமே உண்மை. சீன ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கிம் ேஜாங் உன் அமைதியாகவே நாட்டை வழிநடத்த விரும்புகிறார். ஆனால் கொரிய கடல் பகுதியில் அச்சுறுத்துவதுபோல் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் பயிற்சி மேற்கொள்வதுதான் அவருக்கு பிடிக்கவில்லை. இதனை கண்டிக்கும் விதமாகவே அவர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார்’’ என்கிறார்.

Tags : ruler ,
× RELATED மக்களவை தேர்தலை முன்னிட்டு...