×

திருப்பரங்குன்றம் தொகுதியில் நூலகம் அமைக்க வேண்டும் சட்டசபையில் எம்எல்ஏ சரவணன் பேச்சு

திருப்பரங்குன்றம், ஜன.8: பொதுமக்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் திருப்பரங்குன்றம் தொகுதி பிரசன்னா காலனியில் நூலகம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருப்பரங்குன்றம் தொகுதி(திமுக) எம்எல்ஏ டாக்டர் பா.சரவணன் பேசியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்றளவில் ஒன்னரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கு தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறார். எனது திருப்பரங்குன்றம் தொகுதியில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பிரசன்னா காலனியில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு நூலகம் அமைத்து தர முடியுமா?. மாவட்ட நூலக அதிகாரியை கேட்ட பொழுது, அவர்கள் விதிகளை சொன்னார்கள். அந்த விதிகளில் உறுப்பினர் சேர்க்கை 200 பேர் என்று சொன்னார். அதை எளிதாக செய்ய முடிகிறது.

வாடகையில்லா கட்டிடம் கேட்கிறார்கள், அது முடிகிறது. பர்னீச்சர்களுக்கு ரூ.2 ஆயிரம் கேட்கிறார்கள். அதுவும் முடிகிறது. சந்தாத்தொகை, 2 புரவலர் கேட்கிறார்கள், ரூ.6 ஆயிரம் கேட்கிறார்கள் அதுவும் முடிகிறது. 5 சென்ட் இடம் கேட்கிறார்கள். அதை அப்ரூவல் பண்ணுவதில் பிரச்னைகள் இருக்கின்றன. இந்த அரசு ஊரக உள்ளாட்சி தேர்தலோடு மாநகராட்சிக்கும் தேர்தலை நடத்தியிருந்தால், பிரதிநிதிகள் இந்நேரம் பதவியேற்றிருப்பார்கள். இடத்தை பெறுவதற்கான வாய்ப்புள் கூட அமைந்திருக்கும். இன்றைய தேதியில் இந்திய அளவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்கக் கூடிய நிலையில், ஏன், தமிழகத்திலும் கூட பத்திரிகைகளை திறந்து பார்த்தால், எங்கு பார்த்தாலும் பாலியல் குற்றங்கள் குறித்து செய்தி இருக்கிறது.

வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகம் ஏற்படுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். இந்த நிலையில் இந்த 5 சென்ட் இடம் என்பது சிறிய இடம் தான், தற்போது கூட அரசாங்கம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை எடுக்கிறார்கள். ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு 600 ஏக்கருக்கும் மேற்பட்ட இடத்தை எடுக்கிறார்கள். 5 சென்ட் என்பது மிகக்குறைவான இடம் தான். அதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டு, நூலகம் அமைப்பதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தால், மாணவர்களும் இளைஞர்களும் நன்கு படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். அமைச்சர் செங்கோட்டையன்: தாங்கள் தற்காலிகமாக ஒரு இடத்தை தந்தால், அங்கே நூலகம் திறக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : MLA ,Saravanan ,constituency ,Assembly ,Thiruparankundram ,
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...