×

வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டினால் அதிக அபராதம் மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

மதுரை, ஜன. 8: வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் விசாகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாநகராட்சி மாளிகை கருத்தரங்கு கூடத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு கமிஷனர் விசாகன் தலைமை வகித்து பேசுகையில், “வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பந்தல்குடி வாய்க்காலில் இருந்து வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்கள் இருந்தால் அதனை கண்டறிந்து அவற்றை தடுப்பதற்கு மேற்கொள்ளக் கூடிய பணிகள் குறித்தும், அதற்கான திட்டமதிப்பீடு குறித்தும் முன்னுரிமை அடிப்படையில் அறிக்கை தயார் செய்து ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

கழிவுநீரேற்று நிலையங்களில் இருந்து வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுண்ணுயிர் உரக்கூடம் மற்றும் குப்பைகள் உருவாகும் இடத்திலேயே உரமாக தயாரிக்கும் மையம் ஆகியவற்றில் தினமும் குப்பைகள் சேகரிக்கப்படுவது குறித்தும், உரமாக தயாரிப்பது குறித்தும், அதனுடைய செயல்பாடுகள் குறித்தும், தினமும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்க வேண்டும். மாநகராட்சி கழிப்பறைகளை சுத்தமாக பராமரிப்பதுடன் தேவையான உபகரணங்கள் வாங்கி வைக்க வேண்டும். 24 மணி நேரமும் தண்ணீர் வரும்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கழிப்பறைகளை முறையாக பராமரிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்களை ஏற்படுத்த அறிவுறுத்த வேண்டும். ஒருங்கிணைந்த புகார் மையத்தின் மூலம் பெறப்படும் புகார்ளை காலதாமதமின்றி உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : commissioner ,river ,Vaigai ,
× RELATED மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்...