×

20ம் தேதிக்கு மேல் ஆன்லைனில் பதிவு செய்தால்தான் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளுக்கு எப்.சி., செய்யும் பணி தொடங்கியது

சேலம், ஜன.8: வேக கட்டுப்பாட்டு கருவியை ஆன்லைனில் பதிவு செய்த வாகனங்களுக்கு மட்டுமே எப்சி செய்யும் உத்தரவால்,லாரிகளுக்கு எப்சி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மாநில லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் போக்குவரத்து அமைச்சரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்பட்டுள்ளது. லாரி, டேங்கர் லாரி, டிரெய்லர் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களின் தகுதிச்சான்றை(எப்.சி) ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுக்கு முன்பு,கனரக வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து,லாரி உரிமையாளர்கள் அனைவரும் வேக கட்டுப்பாட்டு கருவியை லாரிகளில் பொருத்தினர். வேக கட்டுப்பாட்டு கருவிகளை பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

லாரிகளின் தகுதிச் சான்று(எப்சி) புதுப்பிக்கும்போது வட்டார போக்குவரத்து அதிகாரிகள்,வேக கட்டுப்பாடு கருவி பொருத்தி இருந்தால் மட்டுமே புதுப்பித்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இருந்து அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கும் ஒரு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது. அதில்,  வேக கட்டுப்பாட்டு கருவி விற்பனை செய்யும் 2 நிறுவனங்களுக்கு மட்டும் ஆன்லைனில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்தியுள்ள வாகனங்களுக்கு மட்டுமே, தகுதிச்சான்று புதுப்பிக்கவேண்டும் என கூறப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும், கடந்த ஒரு வாரமாக ஆயிரக்கணக்கான லாரிகள் தகுதிச்சான்று புதுப்பித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து, மாநில லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து பேசினர். அதில், தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்,வேக கட்டுப்பாட்டு கருவியை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. லாரி உரிமையாளர்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் கருவிகள் மற்றும் விருப்பமான நிறுவனங்களின் வேக கட்டுப்பாட்டு கருவியை ஏற்கனவே வாங்கி பொருத்தியுள்ளனர். தற்போது குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் வேக கட்டுப்பாட்டு கருவி இருந்தால்தான், தகுதிச்சான்று அளிக்க முடியும் என போக்குவரத்து அதிகாரிகள் கூறி வருகிறார்கள். அந்த நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்து ஆன்லைனில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு தகுதிசான்றை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அப்போது  லாரிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தகுதிச்சான்றை புதுப்பிக்கும் பணி எப்போதும்போல் செய்து கொள்ளலாம் எனவும்,  20ம் தேதிக்கு மேல் வேக கட்டுப்பாடு கருவியை ஆன்லைனில் பதிவு செய்து இருந்தால் மட்டுமே, தகுதிசான்றை புதுப்பிக்கும் பணி செய்யலாம் எனவும் சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளின் தகுதி சான்றை புதுப்பிக்கும் பணி நேற்று முதல் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் தொடங்கியது. இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் தனராஜ் கூறுகையில், ‘வேக கட்டுப்பாட்டு கருவியை விற்பனை செய்த 15 நிறுவனங்களுக்கும் ஆன்லைன் பதிவு அனுமதியை வழங்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,’ என்றார்.

Tags :
× RELATED எம்.சாண்ட் லாரிகளை சிறைபிடித்த மக்கள்