×

வீரகனூரில் போலி டாக்டர்கள் குறித்து மருத்துவ குழுவினர் ஆய்வு

கெங்கவல்லி, ஜன.8: விரகனூரில் போலி டாக்டர்கள் குறித்து மருத்துவ குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மெற்கொண்டதால் பரபரப்பு நிலவியது. கெங்கவல்லி அடுத்த வீரகனூர் பேரூராட்சி பகுதிகளில், போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக டாக்டர் சந்தோஷ்பாபு கலெக்டர் ராமனுக்கு புகாரளித்தார்.  இதனையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில், கெங்கவல்லி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் தேவராஜன் தலைமையில், சித்தா டாக்டர் சுசீலா, தலைவாசல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, ராணி கிளினிக் என்ற பெயரில் சீதாராமன் என்ற போலி டாக்டர் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. மருத்துவ குழுவினர் ஆய்வுக்கு வருவதைத் தெரிந்து அந்த போலி டாக்டர் தலைமறைவானார்.

இதேபோல், டாக்டர் நமிதா பெயரில், வேறு ஒரு நபர் சிகிச்சை அளிப்பதாக வந்த தகவலையடுத்து, மருத்துவ குழுவினர் அங்கு சென்று ஆவணங்களை பறிமுதல் செய்து டாக்டர் நமீதாவிடம் விளக்கம் கேட்டுள்ளனர். தொடர்ந்து, வீரகனூரில் உள்ள மெடிக்கல் கடைகளிலும் சான்றிதழ் குறித்து ஆய்வு நடத்தினர். மருத்துவ குழுவினர் இந்த திடீர் ஆய்வால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆய்வு குறித்து டாக்டர் தேவராஜன் கூறுகையில், ‘வீரகனூர் சுற்றுவட்டார பகுதியில் போலி டாக்டர்கள் சிலர் சித்தா மற்றும் அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக வந்த புகாரின்பேரில் கிளினிக் மற்றும் மெடிக்கல் கடைகளில் ஆய்வு மேற்கொண்டோம். அதில் சில மருத்துவமனைகள் மற்றும் மெடிக்கல் கடைகள் ஆன்லைனில் பதிவு செய்தும், ஆவணங்கள் கிடைக்காமல் உள்ளது. அந்த ஆவணங்களை குறிப்பிட்ட நாட்களில் ஒப்படைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,’ என்றார்.

Tags : doctors ,team ,Veeraganur ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை