×

தினந்தோறும் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு பள்ளப்பட்டி ஸ்டேஷனில் குற்றப்பிரிவு முடங்கியது

சேலம், ஜன.8: சேலம் பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேசனில் குற்றப்பிரிவு முடங்கிய நிலையில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சேலம் கருப்பூரை சேர்ந்தவர் சாந்தி (37). இவர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் வைத்திருந்த ₹500 பணத்தை இரண்டு பெண்கள் திருடினர். இதனை கண்ட சாந்தி அந்த 2 பெண்களையும் சக பயணிகள் உதவியுடன் பிடித்து பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், அப்பெண்கள் திருப்பத்தூர் காமராஜர் நகரை சேர்ந்த அனிதா (39), கீதா(35) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் பயணிகளை குறி வைத்து திருடர்கள் புகுந்துள்ளனர். குறிப்பாக கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, சூரமங்கலம் மற்றும் திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களும், ஆண்களும் திருட்டு தொழில் செய்வதற்காகவே சேலம் வருகின்றனர். தினந்தோறும் லேப்டாப், செல்போன், நகை, பணம் திருட்டு என 5க்கும் மேற்பட்ட புகார்கள் வந்த வண்ணமே இருக்கிறது. ஆனால் போலீசார் மனுக்களை வாங்காமல் இழுத்தடித்து, அவர்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர். பள்ளப்பட்டியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சாலைராம் சக்திவேல் கடந்த 2 மாதத்திற்கு முன்பு அதிரடியாக சென்னைக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு அந்த ஸ்டேசனுக்கு இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்படவில்லை.

அதேபோல் பள்ளப்பட்டி குற்றபிரிவில் வெறும் 6 போலீசாரே பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பல்வேறு பணிகளுக்கு சென்றுவிடுவதால் குற்றப்பிரிவு முடங்கிபோய் கிடக்கிறது. இதனால் திருட்டு, வழிப்பறி சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும். அதுமட்டும் அல்லாமல், குற்றப்பிரிவிற்கு கூடுதல் காவலர்களை நியமிப்பதுடன், காலை, மாலை நேரங்களில் தனிப்படையினர் அமைத்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் திருட்டினை தடுக்க முடியும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : thefts ,school district ,
× RELATED 20 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு ₹15.84 லட்சம் இழப்பீடு வசூல்