விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்

மேட்டூர், ஜன.8: மேட்டூர் அருகே விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரை சேர்ந்தவர் ஜெய்லாதீன். அஞ்சல் அலுவலகத்தில் பகுதிநேர ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2011ம் ஆண்டு கொளத்தூர் பஸ் நிலையம் அருகே தனது டூவீலரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ஜெய்லாதீனுக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வேண்டும் என மேட்டூர் சார்பு நீதிமன்றத்தில் அவரது மனைவி பரித்ரா வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜெய்லாதீன் குடும்பத்தினருக்கு ₹16 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென 2018ம் ஆண்டு மேட்டூர் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால், அரசு போக்குவரத்து கழகம் இழப்பீட்டை வழங்கவில்லை. இந்நிலையில், மீண்டும் பரித்ரா இதுகுறித்து மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ₹16 லட்சம் இழப்பீடும், அதற்கான வட்டி மற்றும் வழக்கு செலவு சேர்த்து ₹27 லட்சத்து 67 ஆயிரத்தை வழங்க அரசு போக்குவரத்துக்கழக மேட்டூர் கிளை வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து, நிவாரணம் வழங்காததால் நேற்று மேட்டூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Court employees ,
× RELATED மஞ்சூர் அருகே அரசு பேருந்தை வழி மறித்த காட்டு யானை