×

பழைய நடைமுறைப்படி ஆர்டிஓ அலுவலகங்களில் 20ம் தேதி வரை லாரிகளுக்கு எப்சி பெறலாம்


நாமக்கல், ஜன.8: ஆர்டிஓ அலுவலகங்களில் பழைய நடைமுறைப்படி வரும் 20ம் தேதி வரை லாரிகளுக்கு தகுதிச்சான்று(எப்.சி.) பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லாரி, ட்ரெய்லர் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஆண்டுதோறும் தகுதிச்சான்று(எப்.சி.) புதுப்பிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக எப்சி காட்டும்போது வேக கட்டுபாடு கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவஹர் கடந்த மாத இறுதியில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி, போக்குவரத்து ஆணையர்(டிசி) அலுவலகத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களின் வேக கட்டுப்பாடு கருவியை பொருத்தியுள்ள லாரிகளுக்கு மட்டும் தகுதிச்சான்று புதுப்பிக்கப்படும் என உத்தரவிட்டிருந்தார். தமிழகத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் பல்வேறு நிறுவனங்களின் வேக கட்டுபாடு கருவியை பொருத்தியுள்ளனர். கடந்த காலங்களில் இந்த கருவியை காட்டி தான் எப்.சி. பெற்று வந்தனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் வேக கட்டுபாடு கருவி இருந்தால் தான் எப்.சி. பெற முடியும் என்ற உத்தரவு லாரி உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. புதிய உத்தரவால், ஆர்டிஓ அலுவலகங்களில் கடந்த ஒரு வாரமாக லாரிகளுக்கு தகுதிச்சான்று அளிக்கப்படவில்லை.  தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்சனை குறித்து, நேற்று சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ் மற்றும் பல்வேறு பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, இந்த பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் தாலுகா லாரி உரிமையாள்கள் சங்கம் சார்பில் உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள வாடஸ் அப் மெஜேஜ் விபரம் வருமாறு: மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தலைமையில்  பொறுப்பாளர்கள் சென்னையில் தமிழக  போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வரும் 20ம் தேதி வரை தற்போது வாகனங்களில்  பொருத்தியுள்ள வேக கட்டுப்பாடு கருவியை காட்டி வட்டார போக்குவரத்துக்கு அலுவலகத்தில்  தகுதிச்சான்றிதழ் (எப்.சி.) பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : offices ,RTO ,
× RELATED ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு...