×

குமாரபாளையத்தில் சாலையில் மது குடித்தவர்கள் விரட்டியடிப்பு

குமாரபாளையம்,  ஜன.8: சாலையில் அமர்ந்து மது குடிப்பதால் பெண்கள் குழந்தைகள் அச்சப்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அங்கு விரைந்த திமுக நிர்வாகிகள் அனைவரையும் அப்புறப்படுத்தினர். குமாரபாளையத்தில் இடைப்பாடி சாலையில் உள்ள அரசு மதுக்கடையில் சரக்கு  வாங்கும் குடிமகன்கள், கோம்பு பள்ளத்தின் ஓடைமேல் உள்ள தரைப்பாலத்தில்  அமர்ந்து குடித்து கும்மாளமிடுவது வழக்கமாக இருந்தது. அன்றாடம் நடக்கும் இந்த செயலாளர அப்பகுதி பெண்கள் மற்றும் சிறுமிகள் அப்பகுதியில் நடமாடவே அச்சத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தெரிந்த போதிலும்,  மதுவை அரசே விற்பதால் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.

இந்நிலையில், குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்ததால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல்  அறிந்த முன்னாள் நகர மன்றத்தலைவர் சேகர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு விரைந்தார். அங்கு, சாலை மற்றும் தரையிலும் பாட்டில்களுடன் பார்ட்டி வைத்துக் கொண்டிருந்த  குடிமகன்களை வேறு இடத்திற்கு செல்லும் படி கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அறிந்த அப்பகுதிக்கு திமுக நிர்வாகிகளும் விரைந்து வந்தனர். குடித்து விட்டு  அட்டகாசம் செய்து கொண்டிருப்பவர்களை பிடித்து போலீசி–்ல் ஒப்படைப்பதாக எச்சரித்தனர்.  உடனே, அங்கிருந்த குடிமகன்கள் பாட்டில்களுடன் சைடு டிஷ்களையும்  அள்ளிக்கொண்டு மதுக்கடையின் பின்புறத்தில் உள்ள காலியிடத்திற்கு சென்றனர்.  காவல்துறை செய்ய வேண்டிய பணியை மேற்கொண்ட திமுக நிர்வாகிகளுக்கு அப்பகுதி  மக்கள் நன்றி தெரிவித்தனர்.

காவல்துறை எச்சரிக்கை
குமாரபாளையம்- இடைப்பாடி சாலையில் வழிநெடுகிலும் குடித்து கும்மாளமிடும் குடிமகன்களால் மக்கள் அவதிக்குள்ளாகி வந்த நிலையில்,  கடந்த இரண்டு நாட்களாக முன்னாள் நகர மன்ற தலைவர் சேகர் தலைமையில் அப்பகுதியில் முகாமிட்ட திமுக இளைஞரணியினர் போதை ஆசாமிகளை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, குடிமகன்கள் மீண்டும் சாலையை ஆக்கிரமிக்காத வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று பிரச்சனைக்குரிய இடத்தில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதில், “இங்கு அமரவோ, மது அருந்தவோ கூடாது, மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணியினரின் முயற்சியால் குடிமகன்களின் தொல்லையிலிருந்து விடுதலை கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

Tags : drivers ,road ,Kumarapalai ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...