×

திமுக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்த அனுபவம் வாய்ந்த முன்னாள் எம்எல்ஏ

நாமகிரிப்பேட்டை, ஜன.8: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தனி தொகுதியில் கடந்த 2001ம் ஆண்டு  அதிமுக சார்பில் போட்டியிட்டு கலாவதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். பின்னர், 2011ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்ததலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்நிலையில், நடந்து முடிந்த உள்ளாச்சித் தேர்தலில் நாமகிரிப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் பதவி மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்டவுடன், ஒன்றியக்குழு உறுப்பினராக போட்டியிட விருப்ப மனு செய்தார். ஏற்கனவே எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக கலாவதி பதவி வகித்துள்ளதால், எந்தவித எதிர்ப்புமின்றி மிக எளிதாக நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் 11வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. எதிர்பார்த்தது போல், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் ஆரம்பத்தில் இருந்தே அதிமுக வேட்பாளர்களின் கை ஓங்கியது.

இதனால், 11வது வார்டு எண்ணும் போதே, ஒன்றியத்தலைவர் கலாவதிதான் என கட்சிக்காரர்கள் முடிவு செய்து கொண்டாட தொடங்கி விட்டனர். திமுக சார்பில் எதிர்த்து போட்டியிட்ட சித்ரா சரவணன் அரசியலில் பெரிய அனுபவம் இல்லாதவர் என்பதால் கலாவதி எளிதில் வெற்றி பெறுவார்  என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால், கலாவதிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே சித்ரா சரவணனுக்கு அதிக ஓட்டு விழுந்திருந்தது. இறுதியில் 434 ஓட்டு வித்தியாசத்தில் முன்னாள் எம்எல்ஏ கலாவதி தோல்வியை சந்தித்தார். இதனால், அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Tags : MLA ,candidate ,DMK ,
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...