×

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பரபரப்பு லாரி டிரைவர்கள் ஊழியர்கள் மோதல்

செங்கல்பட்டு, ஜன. 8: செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் லாரி டிரைவர்கள், ஊழியர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் இருந்து சிமென்ட் பவுடர் ஏற்றிக்கொண்டு 10  டாரஸ் லாரிகள் நேற்று மாலை நாமக்கல் நோக்கி புறப்பட்டன. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடிக்கு லாரிகள் வந்தடைந்தன. அப்போது, கனரக வாகனம் என்பதால் எடை அளவுக்கு ஏற்றார்போல் சுங்க கட்டணம் வழங்க வேண்டும் என லாரி டிரைவரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் கேட்டுள்ளனர்.

இதற்கு அதிக கட்டணம் தர மறுத்து, சுங்க ஊழியர்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், வாக்குவாதம் முற்றி சுங்கச்சாவடி ஊழியர்களும், லாரி டிரைவர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால், சுங்கச்சாவடி பூத் கண்ணாடி அடித்து நொறுக்கபட்டது. இரு தரப்பிலும் 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையொட்டி, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடித்து, காவல்நிலையம் கொண்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Strike truck drivers staff clash ,Chengalpattu ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்