×

வாலாஜாபாத்தில் கலெக்டர் ஆய்வு எதிரொலி 2 டாஸ்மாக் கடைகள் அதிரடி அகற்றம்: பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி

வாலாஜாபாத், ஜன.8: வாலாஜாபாத்தில் கடந்த மாதம் கலெக்டர் ஆய்வு செய்ததன் எதிரொலியாக, தாலுகா அலுவலகம் அருகே இருந்த, 2 டாஸ்மாக் கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வாலாஜாபாத் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பஸ் நிலையம், ரயில் நிலையம், ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், காவல் நிலையம், வங்கிகள் உள்பட பல்வேறு அரசு மற்றும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

வாலாஜாபாத்தை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள மக்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும்,  வாலாஜாபாத் வந்து, அங்கிருந்து பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால், வாலாஜாபாத் பகுதியில் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு கடைகளும், டாஸ்மாக் கடைகளுக்கு வரும் குடிமகன்களால் ஏற்படும் தொல்லைகள் அதிகரித்தது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகள் சார்பிலும், வணிகர்கள் சார்பிலும் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதைதொடர்ந்து கலெக்டர் பொன்னையா, கடந்த மாதம் வாலாஜாபாத் நகர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வாலாஜாபாத் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை உடனடியாக அங்கிருந்து அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 2 டாஸ்மாக் கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். வணிகர்கள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.

பதுக்கி வைத்து ஜோரான விற்பனை
வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டன. இதனை கலெக்டர் பொன்னையா உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். இதனால், 2 கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
ஆனாலும், அங்கு கள்ளச்சந்தையில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்வதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து, மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்பவர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED இடைத்தரகர்களால் சிதையும்...