×

குன்றத்தூர் ஒன்றியம் எருமையூரில் பராமரிப்பு இல்லாமல் மாசடைந்து கிடக்கும் கோயில் குளம்: கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

பெரும்புதூர், ஜன. 8: குன்றத்தூர் ஒன்றியம் எருமையூரில் உள்ள கோயில் குளம் பராமிப்பு இல்லாமல் மாசடைந்து கிடக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. குன்றத்தூர் ஒன்றியம் எருமையூர் கிராமத்தில் பஜனை கோயில் உள்ளது. இந்த கோயில் அருகில் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் அமைந்துள்ள குளம்  சுமார் 30 சென்ட் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் தண்ணீரை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை எருமையூர் பஜனை கோயில் தெரு மற்றும் குளக்கரையை ஒட்டியு குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தினர். மேலும், பஜனை கோயில் அபிஷேகத்துக்கு இந்த குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்த குளத்தை ஊராட்சி நிர்வாகமும், வட்டார வளர்ச்சி அலுவலகமும் முறையாக பராமரிக்கவில்லை.

இதனால் குளம் மாசடைந்து காணப்படுகிறது. தற்போது பஜனை கோயில் குளத்தையொட்டி உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் குப்பை, கழிவுகள் குளத்தில் கொட்டுகின்றனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த சிலர் குளத்தை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த குளத்தை சுற்றி மாசடைந்து, கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகும் தொழிற்சாலையாக மாறிவிட்டது. எனவே மாசடைந்துள்ள எருமையூர் பஜனை கோயில் குளத்தை உடனடியாக சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : temple pond ,Kundathoor Union Erumayur ,panchayat administration ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...