×

மாவட்டத்தின் முன்மாதிரி அங்கன்வாடி மையத்தில் மின் இணைப்பு இல்லாததால் குழந்தைகள் கடும் அவதி: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத், ஜன. 8: காஞ்சிபுரம் மாவட்டத்தின் முன்மாதிரியான அங்கன்வாடி மையத்தில், மின் இணைப்பு இல்லாததால் குழந்தைகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் கீழ்ஒட்டிவாக்கம் ஊராட்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம், மாற்றுத் திறனாளிகள் விடுதி உள்பட பல்வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த மையக் கட்டிடம் சிதிலமடைந்து காணப்பட்டதால், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கடந்த 8 மாதங்களுக்கு முன் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த அங்கன்வாடி மையம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் முன்மாதிரி மையமாக கட்டப்பட்டது. இந்த கட்டிடம் ஓவியங்களும், உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆங்கில எழுத்துக்கள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் என பிரமிக்க வைக்கும் வகையில் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. ஆனால், அடிப்படை வசதிகளில் ஒன்றான மின் இணைப்பு இதுவரை கொடுக்கவில்லை. இதனால், குழந்தைகள் கொசு, ஈ தொல்லைகளாலும், கோடைகாலங்களில் காற்று இல்லாமல் புழுக்கத்திலும் பெரும் சிரமம் அடைகின்றனர்.

இதுகுறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், குழந்தைகளின் பெற்றோர் புகார் தெரிவித்தும், மின் இணைப்பு கொடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.  அதிநவீன வசதிகள் பொருந்திய இந்த அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளில் ஒன்றான மின் இணைப்பு இல்லாதது இப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையை அளிக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த அங்கன்வாடி மையத்துக்கு உடனடியாக மின் இணைப்பு கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Children ,center ,Anganwadi ,district ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்