×

ஓஎம்ஆர் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் தவிப்பு: உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


திருப்போரூர், ஜன.8: சென்னைப் புறநகர் பகுதியான கேளம்பாக்கம் அருகே தையூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி பழைய மாமல்லபுரம் சாலையிலும் அமைந்துள்ளது. கேளம்பாக்கம் மற்றும் தையூர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகைப் பெருக்கத்தால், இங்கு ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள், ஓட்டல்கள், சிறு உணவகங்கள் உருவாகி உள்ளன. இந்த ஓட்டல்கள், டீ கடைகள், தொழிலாளர்கள் தங்கும் குடில்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் சேரும் கழிவுப் பொருட்கள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால், பலரும் தங்களது, நிறுவனங்களை ஒட்டியுள்ள சாலையில், இந்த கழிவுகளை கொட்டுகின்றனர்.

குறிப்பாக பல கடைகள், ஓட்டல்கள் ஆகியவை பழைய மாமல்லபுரம் சாலையிலேயே அமைந்துள்ளன. இதனால், பழைய மாமல்லபுரம் சாலையின் ஓரங்களில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் மாலை போல் காணப்படுகிறது.
குறிப்பாக, தையூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கண்மால் என்ற இடத்தில் இதுபோன்று ஓட்டல், டீ கடை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மத்தியில் சாலையோரத்தில் ஏராளமான குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும், உணவு கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதில் ஈ, கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு தொற்றுநோயை பரப்புகின்றன. மேலும், இந்த குப்பைகள் மற்றும் கழிவுகளில் உள்ள உணவுப் பொருட்களை தின்பதற்காக பன்றி, மாடு, நாய் ஆகியவை இவற்றைக் கிளறி விடுவதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பலமுறை ஊராட்சி நிர்வாகத்தினர், சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் எச்சரிக்கை செய்தும் இந்த அவலம் தொடர்வதாக அப்பகுதியில் நீண்ட நாட்களாக குடியிருக்கும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, தையூர் ஊராட்சி நிர்வாகம் இவ்வாறு சுற்றுப்புற சூழலை கெடுக்கும் வகையில் ஓஎம்ஆர் சாலையோரம் குப்பை கொட்டும் ஓட்டல்கள், டீ கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும். அவர்களிடம் முறையாக குப்பைகளை தரம் பிரித்து பெற்று சென்று திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : OMR ,sphere ,
× RELATED என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்...