×

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இருந்து ரூ.5 கோடி பஞ்சலோக அம்மன் சிலை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி தகவல்

சென்னை: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லியில் இருந்து ரூ. 5 கோடி மதிப்பிலான பஞ்சலோக அம்மன் சிலை மீட்கப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி கிண்டியில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் பலகோடி மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலையினை சிலர் விற்பனை செய்ய முயற்சிப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் உத்தரவின் பேரில், கூடுதல் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர்  முகேஷ்ஜெயக்குமார், ஆய்வாளர் தென்னரசன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சென்னையில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி கிராமத்தை சேர்ந்த  ராஜசேகர் (36) என்ற ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் சிலையை விலைக்கு வாங்குவது போல் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ராஜசேகர் தன்னிடம் பழமையான பஞ்சலோக அம்மன் சிலை  இருப்பதாகவும் அது ரூ. 5 கோடி  மதிப்பிலானது என்றும் இதற்கு முன்பணமாக ரூ. 10 லட்சத்தை கொடுத்தால் சிலை படத்தினை அனுப்பி வைப்பதாக  தெரிவித்தார்.
இதையடுத்து தனிப்படையினர் சேலம், ஆத்தூர்,  கெங்கவல்லி கிராமத்துக்குச் சென்று அங்கு ராஜசேகரை சிலை கடத்தல் புரோக்கர் போல் சந்தித்தனர். பின்னர் அவரிடம் இருந்த  ஒன்றே கால் அடி உயரத்துடன் 6 அரை கிலோ எடை கொண்ட பஞ்சலோக அம்மன் சிலையை மீட்டனர்.

பின்னர் ராஜசேகரை சென்னை கொண்டு வந்து சிலை கிடைத்தது குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிலை மீட்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் நிருபர்களிடம் கூறும்போது, “சேலம் ஆத்தூரில் கெங்கவல்லி பகுதியில் பஞ்சலோக அம்மன் சிலையை  ராஜசேகர் என்பவரிடம் இருந்து தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சிலை மதிப்பு ரூ. 5 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சிலை பற்றிய வரலாறு யாருக்காவது தெரிந்திருந்தால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டின் எண்ணில் 9498154500  தகவல் தெரிவிக்கலாம். இந்த  சிலை கடத்தலில் யார் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் தெரியவரும்’’ என்றார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஐஜி அன்பு, எஸ்பி ராஜேஸ்வரி, கூடுதல் எஸ்.பி. ராஜாராம் ஆகியோர் உடன் இருந்தனர். பஞ்சலோக அம்மன் சிலை உலோக அம்மன் சிலையாகும். இந்த சிலை 13ம் நூற்றாண்டு சோழர் காலத்திற்கு பிந்தையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சிலை குறித்து ஏதாவது புகார்கள் உள்ளதா என்பது பற்றியும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Panjaloka Amman ,Salem district ,statue abduction ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!