மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து காதல் மனைவியை காரில் கடத்தியதாக மாமனார் குடும்பம் மீது காதலன் புகார்: நெற்குன்றத்தில் பரபரப்பு

சென்னை: காதல் திருமணம் செய்த பெண்ணை அடித்து உதைத்து காரில் கடத்திய பெண்ணை வீட்டாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை நெற்குன்றம் முனியப்பா நகரை சேர்ந்தவர் சிவராஜ் (20). கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவர், மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, மதுரையை சேர்ந்த பொன்னியம்மாள் (எ) மோனிகா (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலானது. ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம், பொன்னியம்மாளின் பெற்றோருக்கு தெரியவந்தது. கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி கடந்த மாதம் 15ம் தேதி மதுரை, அழகர்கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் திருமணம் முடித்த கையோடு புதுமண தம்பதி சென்னைக்கு வந்துவிட்டனர். இதையடுத்து, நெற்குன்றத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இதனால் பொன்னியம்மாள் வீட்டார் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில், வழக்கம்போல நேற்று அதிகாலை 5 மணிக்கு சிவராஜ் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதை அறிந்த பொன்னியம்மாளின் வீட்டார் காரில் அடியாட்களுடன் நேற்று நெற்குன்றத்துக்கு வந்தனர். அங்கு, வீட்டில் தனியாக இருந்த பொன்னியம்மாளை சரமாரியாக அடித்து உதைத்து தரதரவென இழுத்து, காரில் கடத்திச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர், சிவராஜுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர், கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். அதில், ‘எனது மனைவியை அவரது வீட்டார் காரில் கடத்தி சென்று விட்டனர். நடவடிக்கை எடுத்து எனது மனைவியை மீட்டு தர வேண்டும்’’ என்று கூறியிருந்தார். போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Lover ,Madurai ,Chennai ,
× RELATED தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 7 பேருக்கு குண்டாஸ்