×

மெட்ரோ ரயில் நிலையங்களில் 3 நாள் பொங்கல் கலைவிழா

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் 3 நாள் பொங்கல் கலைவிழா நாளை முதல் நடைபெறுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் கலைவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பொங்கல் கலைவிழா நடைபெறுகிறது. தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையத்துடன் இணைந்து, தென்னிந்திய மாநிலங்களின் பல்வேறு கலைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளோடு கொண்டாடப்படவுள்ள இவ்விழா சைதாப்பேட்டை, சென்ட்ரல் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற உள்ளது.

அதன்படி, 9ம் தேதி சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திலும், 10ம் தேதி சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலும், 11ம் தேதி திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்திலும் மாலை 5.45 மணிக்கு தொடங்கும். இதில், ஒப்பனா நடனம், டோலுகுனிதா துள்ளிசை நடனம், தப்பாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.  மூன்று நாள் பொங்கல் கலைவிழா நிகழ்வுகளையும் பொதுமக்கள் கண்டு மகிழ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம். எனவே, மெட்ரோ ரயில் பயணியர், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் இப்பொங்கல் கலைவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Pongal Festival ,Metro Railway Stations ,
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...