×

தேவநேயப்பாவாணர், வீரமாமுனிவர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு முதல் நான்கு புதிய விருதுகள் வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர் பெயரில் அமைந்த விருதுகள் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதல திட்ட இயக்ககத்தின் சார்பாகவும் அருட்பெருஞ்சோதி வள்ளலார், காரைக்கால் அம்மையார் பெயரில் ஆன விருதுகள் தமிழ்வளர்ச்சித்துறை சார்பாகவும் வழங்கப்படவுள்ளன. தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல் மற்றும் தனித்தமிழை போற்றுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் அகராதியியல் துறையில் சிறந்து விளங்கும் தகுதிவாய்ந்த உள்நாட்டு அகராதியியல் அறிஞர் ஒருவருக்கு ‘தேவநேயப் பாவாணர் விருது’ வழங்கப்படவுள்ளது.

வீரமாமுனிவர் நெறியில் அவர்தம் படைப்பு நடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கியும், தமிழ் அகராதித்துறையில் சிறந்துவிளங்கியும், தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள, தமிழை தாய்மொழியாக கொள்ளாத, பிறப்பால் வெளிநாட்டை சார்ந்த தகுதிவாய்ந்த ஒருவருக்கு ‘வீரமாமுனிவர் விருது’ வழங்கப்படவுள்ளது. தகுதிவாய்ந்த அகராதியியல் அறிஞர்கள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தின் sorkuvai.com வலைத்தளத்திலுள்ள அந்தந்த விருதுக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி வரும் 22ம் தேதிக்குள் இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், இரண்டாவது முதன்மைச் சாலை, தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்ப வேண்டும்.   

விண்ணப்பத்துடன் தங்கள் நாட்டைச் சார்ந்த கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், அகராதியியல் வல்லுநர் ஒருவர் என இருவரின் பரிந்துரை சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். பரிந்துரைப்பவர்களின் தன்விவர குறிப்பினையும், புகைப்படத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும். விருதுகளுக்காக தேர்வு செய்யப்படும் அறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் விருது தொகையாக ரூ.1 லட்சமும், ஒரு சவரன் தங்க பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Devanayappanavar ,Viramamunivar ,
× RELATED தேவநேயப்பாவாணர், வீரமாமுனிவர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்