×

கொளத்தூர் தொகுதி நேர்மை நகர், கணேஷ் நகர் பகுதிகளில் துணை மின்நிலைய பணி எப்போது முடியும்? பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: கொளத்தூர் தொகுதி நேர்மை நகர், கணேஷ் நகர் பகுதிகளில் துணை மின்நிலையம் அமைக்கும் பணி எப்போது முடியும் என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது துணை கேள்வி எழுப்பி திமுக தலைவரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சென்னை கொளத்தூர் சட்மன்ற தொகுதிக்கு உட்பட்ட நேர்மை நகரில் துணை மின்நிலையம் அமைக்கும் பணி, பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு, கடந்த 13.10.2018ம் தேதி தொடங்கப்பட்டது. அந்த பணியை 22.10.2019க்குள் முடிக்க வேண்டும் என கால நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இதுவரை அப்பணி நிறைவு செய்யப்படவில்லை. இந்தப் பணியை விரைந்து முடித்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும்.

அதேபோல், கொளத்தூர் தொகுதி கணேஷ் நகர் பகுதியில் 230 கே.வி மற்றும் 33/11 கே.வி. துணைமின் நிலையம் அமைக்க 2009ம் ஆண்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நானும் இந்த அவையில் அமைச்சரிடத்தில் 3 முறை இந்த கேள்வியை கேட்டுள்ளேன். அவரும் விரைந்து முடிக்கப்படும் என உறுதிமொழி தந்திருந்தார். நிலத்துக்கு உண்டான தொகை செலுத்தப்பட்டு சுவரும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் போட்டு இந்த பணியை விரைந்து முடித்து, சுற்றியிருக்கும் 40க்கும் மேற்பட்ட நகரங்கள், பயன்பெறக்கூடிய வகையில், தடையில்லா மற்றும் சீரான மின்சாரம் கிடைக்க அமைச்சர், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில், “அந்தப் பகுதியில் துணைமின் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. டிரான்ஸ்பார்மரும் வந்துவிட்டது. பிரேக்கர் வராத காரணத்தால் ஒரு மாதம் தாமதம் ஆனது. இன்னும் 10 நாட்களில் அது வந்துவிடும். அதிகபட்சம் அந்தப் பணி ஒரு மாதத்தில் முடிக்கப்படும். கணேஷ் நகரைப் பொறுத்தவரை அதற்குண்டான தொகையை இப்போதுதான் கட்டி அந்த இடத்தை கையகப்படுத்தி இருக்கிறோம். அதற்குண்டான டெண்டர் பணியை மேற்கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார். அதிகத் தொகை கேட்ட காரணத்தினால் 2009ம் ஆண்டு முதலே அந்தப் பிரச்னை இருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்தி முடித்து நிலத்தைக் கையகப்படுத்தி இருக்கிறோம். கூடிய விரைவில் பணிகள் நிறைவேற்றப்படும். எதிர்க்கட்சித் தலைவர் கேபிள் பற்றிக் கேட்டார். கிட்டத்தட்ட 65 கிலோ மீட்டர் தொலைவுக்குப் போடப்பட்டுள்ளது. இன்னும் 190 கிலோ மீட்டர் தூரத்திற்குப் போட வேண்டிய பணி பாக்கி இருக்கிறது. அதிகபட்சம் 6 மாதங்களில் அந்தப் பணி முடிந்துவிடும்” என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : areas ,Ganesh Nagar ,Honolulu ,Convention ,MK Stalin ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...