×

மாதவரம் மண்டலத்தின் 4 வார்டுகளில் 3 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பணிகள்: போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு

புழல்: மாதவரம் மண்டலத்தின் 4 வார்டுகளில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனை விரைந்து முடிக்காவிடில் போராட்டத்தில் ஈடுபடுவோம், என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 22வது வார்டுக்கு உட்பட்ட காவாங்கரை கண்ணப்பசாமி நகர், 23வது வார்டுக்கு உட்பட்ட புழல் பெண்கள் சிறைச்சாலை அருகில், 25வது வார்டுக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர், 32வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், பல கோடி ரூபாய் செலவில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் தொடங்கியது.

ஆனால், குடிநீர் வாரியத்துக்கும், பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால், கட்டுமான பணிகள் முடிக்கப்படமால் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், கட்டுமான பணிக்கான தளவாட பொருட்கள் துருப்பிடித்து வீணாகிறது. மேற்கண்ட பகுதி மக்களும் குடிநீர் பற்றாக்குறை பிரச்னையால் தவித்து வருகின்றனர். எனவே, மேற்கண்ட வார்டுகளில் ஆமை வேகத்தில் நடைபெறும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘புழல் காவாங்கரை கண்ணப்ப சாமி நகர், கன்னட பாளையம், புனித அந்தோணியார் நகர், அண்ணாநகர், புழல் கடைவீதி, லட்சுமிபுரம் ரெட்டேரி விநாயகபுரம், கல்பாளையம், டீச்சர்ஸ் காலனி, கடப்பா சாலை ஆகிய பகுதிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், பொது குழாயில்தான் தண்ணீர் பிடிக்கிறோம். 3 ஆண்டுகளாக சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபற்றி கேட்டால் தண்ணீர் தொட்டி கட்டி வருகிறோம். விரைவில் குடிநீர் வழங்கப்படும் என்று கூறுகின்றனர்.

ஆமை வேகத்தில் நடைபெறும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாதவரம் மண்டலம் அலுவலகம், சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்’’ என்றனர். குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் பாதியில் நிற்பதற்கு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு உரிய தொகை வழங்காமல்  விட்டதால் கடந்த 3 ஆண்டுகளாக பணி பாதியிலேயே நிற்கிறது. இதற்கு தமிழக அரசுதான் காரணம். ஒப்பந்ததாரர்களை அழைத்து அவருக்கு சேர வேண்டிய நிலுவை தொகைகளை வழங்கி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’  என்றனர்.

Tags : Madhavaram Zone: Public ,
× RELATED மாதவரம் மண்டலத்தின் 4 வார்டுகளில் 3...