×

7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதில் தாமதம் அரசு, நிதியுதவி பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் வேதனை

வேலூர், ஜன.8: அரசு மற்றும் அரசு நிதியுதவி பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், இவ்விஷயத்தில் அரசு காலதாமதம் செய்வதாகவும் பேராசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 தமிழகத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கிண்டி, தரமணி, கோயம்புத்தூர், ஆரணி உட்பட 21 இடங்களில் உறுப்பு இன்ஜினியரிங் கல்லூரிகளும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வேலூர், கோயம்புத்தூர், காரைக்குடி, பர்கூர், போடி, திருநெல்வேலி, தருமபுரி, திருச்சி, தஞ்சாவூர், சேலம் ஆகிய 10 இடங்களில் இன்ஜினியரிங் கல்லூரிகளும், 3 அரசு நிதியுதவி இன்ஜினியரிங் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர 200க்கும் மேற்பட்ட தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

இதில் அரசு மற்றும் அரசு நிதியுதவி இன்ஜினியரிங் கல்லூரிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரிகளில் பதவி உயர்வின்றி கடந்த 2011ம் ஆண்டு முதல் 60 முதல் 90 விரிவுரையாளர்களும், 220 முதல் 230 உதவி பேராசிரியர்களும் தவித்து வருகின்றனர்.

இதனால் மாநிலம் முழுவதும் 150 முதல் 160 இணை பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த நிலையில் பொறியியல் காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கான 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தாமல் தமிழக அரசு காலதாமதம் செய்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள்.

இதுகுறித்து அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் தரப்பில் கேட்டபோது, ‘தமிழகத்தில் 7வது ஊதியக்குழு பரிந்துரையை 2017ம் ஆண்டு அக்டோபர் முதல் அரசு, அரசு நிதியுதவி பெறும் கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களுக்கு நிறைவேற்ற வேண்டும் என்று அகில இந்திய பல்கலைக்கழக மானியக்குழு யுஜிசி பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் கலைக்கல்லூரி பேராசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டது.

ஆனால் யுஜிசி பரிந்துரையை பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களுக்கு செயல்படுத்துமாறு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஏஐசிடிசி பரிந்துரை செய்தும் தமிழக அரசு இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் 600 அரசு மற்றும் நிதியுதவி பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் வேதனையில் தவித்து வருகின்றனர்’ என்றனர்.

Tags :
× RELATED முதல் வாக்காளர்கள், 5 நாளான...