×

மகளை ஒன்றியக்குழு தலைவர் ஆக்குவதற்காக திமுக கவுன்சிலர்களின் கணவர்களை கடத்திய அதிமுக பிரமுகர்

போளூர், ஜன.8: திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் 7 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் மகேஸ்வரி, பரமேஸ்வரி, அதிமுக சார்பில் ஜீவா, கேசவன், காளி, தேமுதிகவை சேர்ந்த கவிதா மற்றும் அதிமுக  பிரமுகர் குட்டக்கரை ராமகிருஷ்ணன் மனைவி செல்வி என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதில் ஜீவாவை ஒன்றியக்குழு தலைவராக்கும் முயற்சியில் அவரது தந்தையான அதிமுக ஒன்றிய செயலாளர் வெள்ளையன் ஈடுபட்டார். ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் மொத்தம் 7 வார்டுகள் என்பதால் 4 பேர் ஆதரவு இருந்தாலே ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடித்துவிடலாம் என்ற நிலை உள்ளது. அதன்படி கூட்டணி கட்சியான தேமுதிகவுடன் சேர்ந்து 4 பேர் வெற்றி பெற்றிருப்பதால் ஜீவா ஒன்றியக்குழு தலைவராக்கலாம் என்ற நிலை இருந்தது.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில் சுயேச்சை கவுன்சிலர் செல்வியை தலைவராக்க அவரது கணவரும், அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவருமான ராமகிருஷ்ணன், அதிமுக கவுன்சிலர் காளி, திமுக பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் 2 பேர், தேமுதிக கவுன்சிலர் கவிதாவின் கணவர் கோவிந்தன் ஆகியோரை கடத்தி சென்று மறைவிடத்தில் தங்க வைத்திருந்தார். இதனால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பதவி ஏற்புக்காக தனது கட்டுப்பாட்டில் உள்ளவர்களை ராமகிருஷ்ணன் காரில் அழைத்து வந்தார். அப்போது, அவரிடம் இருந்து காளியை கடத்தி செல்ல அதிமுக ஒன்றிய செயலாளர் வெள்ளையன் தலைமையில் அக்கட்சியினர் முயன்றனர். அப்போது, அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து விரட்டினர்.

இதையடுத்து பதவி ஏற்பு விழா முடிந்து வெளியே வரும்போது காளியை கடத்துவதற்கு அதிமுகவினர் தயார் நிலையில் இருந்தனர். இதனால் பயந்து போன காளி, பதவி ஏற்பு விழா முடிந்து மற்றவர்கள் வெளியே சென்ற பிறகும் அலுவலகத்திலேயே இருந்தார். மதியம் 12 மணி கடந்தும் அவர் வெளியே வராததால் அதிமுகவினர் வெளியே கூச்சல் போட்டபடியே மிரட்டி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போளூர் டிஎஸ்பி குணசேகரன் ஜமுனாமரத்தூருக்கு சென்று ராமகிருஷ்ணன், வெள்ளையன், காளி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஒன்றியக்குழு உறுப்பினர் காளி ‘2 தரப்பினரும் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். நான் யாருடனும் செல்ல விரும்பவில்லை. நான் என் வீட்டிற்கு செல்கிறேன். எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும். அமைச்சரும், எம்எல்ஏவும் யாருக்கு ஆதரவு தர சொல்கிறார்களோ அவருக்கு நான் ஆதரவு தருவேன். அதுவரை யாரும் என்னை தொந்தரவு செய்யக்கூடாது' என்றார். இதனை ஏற்று போலீஸ் பாதுகாப்புடன் காளியை பெருமுட்டம் கிராமத்திற்கு அழைத்து சென்றனர். அத்துடன் 11ம் தேதி வரை காளியை யாரும் கடத்த முயற்சி செய்தால் நடவடிக்கை எடுப்போம் என டிஎஸ்பி குணசேகரன் எச்சரித்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : AIADMK ,husbands ,councilors ,daughter union leader ,DMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...