×

திருவண்ணாமலையில் வரும் 10ம் தேதி பவுர்ணமி கிரிவலம், ஆருத்ரா தரிசனம் 2 நாட்கள் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருவண்ணாமலை, ஜன.8: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் மற்றும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, இரண்டு நாட்கள் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 10ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு தொடங்கி, 11ம் தேதி அதிகாலை 1.43 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, இரண்டு நாட்கள் இரவும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரும் 10ம் தேதி பிரசித்தி பெற்ற ஆருத்ரா தரிசன விழா, அண்ணாமலையார் கோயிலில் நடைபெறுகிறது. அதையொட்டி, நாளை இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத அண்ணாமலையார் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, 10ம் தேதி காலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைெபறும்.

அப்போது, மகா தீபத்தின்போது தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட மகாதீப மை (தீபச்சுடர் பிரசாதம்) நடராஜருக்கு அணிவிக்கப்படும். பின்னர், திருமஞ்சன கோபுரம் வழியாக சுவாமி மாடவீதி வலம் வந்து அருள்பாலிப்பார். எனவே, பவுர்ணமி கிரிவலம் மற்றும் ஆருத்ரா தரிசனத்துக்காக பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, பெங்களூரு, வேலூர், காஞ்சிபுரம், செய்யாறு, வந்தவாசி, ஆரணி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிதம்பரம் நடரஜாஜர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக, திருவண்ணாமலையில் இருந்து சிதம்பரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Thiruvannamalai ,Arutra Darshanam ,Purnami Giriwalam ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...