×

அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 33 மெட்ரிக் டன் உயர்ரக பொன்னி நெல் விளைச்சல் கடந்த ஆண்டைவிட மகசூல் அதிகரிப்பு

=திருவண்ணாமலை, ஜன.8: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான விளைநிலத்தில், 33 மெட்ரிக் டன் உயர்ரக பொன்னி நெல் அறுவடையாகியுள்ளது. மேலும், கடந்த ஆண்டைவிட விளைச்சல் அதிகரித்திருக்கிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ெசாந்தமான சொத்துக்கள், விளைநிலங்கள், கட்டிடங்கள் ஆகியவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. இவற்றின் தற்போதய சந்தை மதிப்பு 1000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை அருகே நாயுடுமங்கலம் பகுதி பொற்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட தனகோட்டிபுரம் கிராமத்தில் மொத்தம் 147 ஏக்கர் விளைநிலம் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமானதாகும். அதில், 39 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலத்தில் உயர்ரக பொன்னி ெநல் சாகுபடியை, அண்ணாமலையார் கோயில் நிர்வாகமே நேரடியாக மேற்கொண்டது.

மீதமுள்ள நிலம், ஆண்டு குத்தகை அடிப்படையில், அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்கு சொந்தமான விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக, சுமார் 36 ஏக்கர் பரப்பளவிலான ஏரியும், பம்பு செட் வசதியுடன் கூடிய 3 திறந்தவெளி கிணறுகளும் உள்ளன. திருவண்ணாமலை பகுதியில், கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கைகொடுத்தது. எனவே, நீர்நிலைகள் நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக, அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான விளைநிலம் அமைந்துள்ள தனகோட்டிபுரத்தில் உள்ள ஏரி மற்றும் கிணறுகள் அனைத்தும் முழுமையாக நிரம்பியிருக்கின்றன. எனவே, அந்த பகுதியில் இந்த ஆண்டு விவசாயம் செழித்திருக்கிறது. மேலும், அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 39 ஏக்கர் விளைநிலத்தில், கோயில் நிர்வாகம் சாகுபடி செய்த உயர்ரக பொன்னி நெற்பயிர் அதிக மகசூலை அள்ளி வழங்கும் நிலையில் செழித்துள்ளது.

பொன்னி நெல் ரகம் சாகுபடி செய்யப்பட்டுள்ள 39 ஏக்கரில், தற்போது முதற்கட்டமாக 19 ஏக்கர் பரப்பளவில் அறுவடை நடந்திருக்கிறது. மீதமுள்ள 20 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர் கதிர் முற்றிய நிலையில் இருப்பதால், பொங்கலுக்கு பிறகு அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. மேலும், 19 ஏக்கரில் தற்போது நடந்த அறுவடை மூலம், 75 கிலோ எடைகொண்ட 442 மூட்டை நெல் (33 மெட்ரிக் டன்) மகசூல் கிடைத்திருக்கிறது. அந்த நெல் மூட்டைகள், அண்ணாமலையார் கோயிலில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில் வழக்கமாக, ஒரு ஏக்கருக்கு 18 முதல் 20 மூட்டை வரை மட்டுமே விளைச்சல் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு சராசரியாக 23 மூட்டை வரை மகசூல் கிடைத்திருக்கிறது.
வேளாண்துறையின் நேரடி ஆலோசனையின் அடிப்படையில், செம்மை நெல் சாகுபடி முறையில் விவசாயம் நடந்ததால், கூடுதல் மகசூல் கிடைத்திருப்பதாக விளைநிலங்களை பராமரிக்கும் ஊழியர்கள் தரப்பில் தெரிவித்தனர். மேலும், கோயில் நிலத்தில் விளைச்சலாகியிருக்கும் பொன்னி நெல் அரிசியாக்கப்பட்டு, இந்த ஆண்டு முழுவதும், அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்ய பயன்படுத்தப்படும். மேலும், நொய், தவிடு, வைக்கோல் போன்றவை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் உள்ள பசுக்களுக்கு பயன்படுத்தப்படும்.

Tags : land ,Annamalaiyar temple ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!