×

திருக்கோவிலூர் பகுதியில் தொடரும் எலிபேஸ்ட் தற்கொலை

திருக்கோவிலூர், ஜன. 8: திருக்கோவிலூர் பகுதியில் எலிபேஸ்ட் தின்று தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிபுற போயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.  விபத்து, மருந்து குடித்து, பாம்பு குடித்து சிகிச்சை பெறுபவர்களை விட தற்போது தினந்தோறும் எலிபேஸ்ட் தின்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், மாணவிகள் மற்றும் பெண்கள் தங்கள் வீடு, அலுவலகங்களில் ஏற்படும் பிரச்னையை சமாளிக்க முடியாமலும், உடலில் ஏற்படும் வலியை தாங்க முடியாமல் தவறான முடிவெடுத்து பல்வேறு முறையில் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். இதில் முக்கிய பங்கு எலிபேஸ்ட் வகிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சாதாரணமாக கிடைக்கப்படும் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்வதில் முக்கிய பங்கு வகித்து வருவதாக ஆய்வில் தெரிய வருகிறது. எலிபேஸ்ட் தடை செய்யப்பட்டதாக சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் பெட்டிகடை உள்ளிட்ட அனைத்து கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு உணவு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், எலிபேஸ்ட் உபயோகிப்பது தமிழகத்தில் 2018ம் ஆண்டின் சுகாதாரதுறையின் கணக்கின்படி 5வது இடத்தில் உள்ளது. விஷத்திற்கு பொதுவான மருந்துகள் இருந்தும் எலிபேஸ்டுக்கு  குறிப்பிட்ட சொல்லக்கூடிய மாற்று மருந்து இல்லாத காரணத்தால் எலிபேஸ்ட் உட்கொண்டவர்களை காப்பாற்ற முடியாமல் போகிறது. எலிபேஸ்ட்டில் கொடிய விஷமான மஞ்சள் பாஸ்பரஸ் உள்ளது. இதனை உண்பதால் இறப்பையில் செரிமானத்திற்கு சுரக்கப்படும்  ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் சேர்ந்து பாஸ்போரிக் அமிலமாக மாறுகிறது. இதனையடுத்து பாஸ்போரிக் அமிலத்துடன் உடம்பில் உள்ள சர்க்கரை மற்றும் நீருடன் சேர்ந்து வினைபுரிந்து  கொடிய விஷமாக மாறி முதலில் கல்லீரல், சிறுநீரகத்தை பாதிப்படைய செய்கிறது. இதனையடுத்து உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி செல்களை அழித்து உடம்பில் உள்ள அனைத்து பாகங்களையும் ஒவ்வொன்றாக பாதித்து கடைசியாக நுரையீரல் பாதித்து மூச்சுதிணறல் ஏற்பட்டு இறப்பதாக தெரிவித்தனர். ஆகையால் தமிழக அரசு எலிபேஸ்ட்டை தடை செய்தும், விற்பனை செய்யப்படும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடர்ந்து எலிபேஸ்ட் தின்று இறப்பவர்களை மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : suicide ,Tirukovilur ,area ,
× RELATED முகையூர் பகுதி மக்களுக்கு ஓட்டுக்கு...