×

திருக்கோவிலூர் அருகே தேடப்பட்டு வந்த சாராய வியாபாரி அதிரடி கைது

திருக்கோவிலூர், ஜன. 8: திருக்கோவிலூர் அருகே தேடப்பட்டு வந்த பிரபல சாராய வியாபாரியை போலீசார் அதிரடியாக கைது செய்து, 200 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் சங்கர் உத்தரவின் பேரில் காவல்நிலைய ஆய்வாளர் பாண்டியன், உதவி ஆய்வாளர்கள் திருமால், சுரேஷ், தலைமை காவலர் கந்தன், மத்திய புலனாய்வு பிரிவு தலைமை காவலர் குமரன் ஆகியோர் வீரபாண்டி பகுதியில் கடந்த 2 நாட்களாக தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீரபாண்டி குளக்கரைக்கு அருகே சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் ஏற்கனவே சாராய வழக்குகளில் தேடப்பட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சேட்டு (எ) ஒத்தகாது சேட்டு (30) என்பவர் பிளாஸ்டிக் கேனில் சாராயம் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அதே பகுதியில் விற்பனைக்காக 2 லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த 120 லிட்டர் சாராயம் மற்றும் பாக்கெட் சாராயம் என 200 லிட்டர் சாராயத்தையும் போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட சேட்டு, கடந்த 4 வருடமாக வீரபாண்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சாராயம் காய்ச்சி மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் இவர் மீது அரகண்டநல்லூர் காவல்நிலையத்தில் மட்டும் 8க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : liquor dealer ,Tirukovilur ,
× RELATED முகையூர் பகுதி மக்களுக்கு ஓட்டுக்கு...