×

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் எதிர் நோக்கியுள்ள சவால்கள்

கடலூர், ஜன. 8: பல ஆண்டுகளுக்கு பின் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட உள்ளன. 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 287 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 681 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 5005 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கடந்த 6ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர்.  மாவட்ட ஊராட்சி தலைவர்,  துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் மற்றும் சிற்றூராட்சி துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வரும் 11ம் தேதிநடைபெற உள்ளது. இதுநாள் வரையில் கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத காரணத்தால் உள்கட்டமைப்பு சீர்குலைந்து அடிப்படை வசதிகளற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளும் அவற்றின் தலைவர்கள், துணை தலைவர்கள், உறுப்பினர்கள் பொறுப்பேற்று செயல்பட உள்ள நிலையில் அவர்கள் எதிர்நோக்கியுள்ளசவால்கள் குறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மருதவாணன் கூறுகையில், அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர், குடிசை வீடுகளுக்கு பதிலாக கான்கீரிட் வீடுகள், தூய்மை பாரத திட்டத்தின் கீழ் குப்பை இல்லாத ஊராட்சிகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும்.

வடிகால் வாய்க்கால்களை தூர்வார உள்ளாட்சி பகுதிகளில் தூய்மையை பராமரிக்க தேவையான துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இயற்கை பேரிடர்களாலும்,  பல்வேறு அரசு திட்டங்களாலும் 90 சதவீத சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. புதிய சாலைகள் அமைக்கும் பணியை உடனடியாக துவங்க வேண்டும். டெங்கு நோய் பரவாமல் தடுக்க செயல் திட்டம் தீட்டி கொசுக்களை ஒழிக்கவும், பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7600 கோடி நிதி வர உள்ள நிலையில் சிறப்பாக ஊழலின்றி அத்தனை பணிகளையும் செய்து முடிக்க ஒரு நல் வாய்ப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைத்துள்ளது. மேல் அதிகாரிகள் ஒப்பந்தத்தில் லஞ்சம் கேட்பது தவிர்க்கப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு என்ன என்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதி அளிக்கவிருக்கிறது என்பதை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம்  தெரிவிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் வரும் 5 ஆண்டுகளில் தாங்கள் என்ன செய்ய போகிறோம் என்பதை செயல்திட்டமாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

செய்யும் பணிகள் அனைத்தையும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் தணிக்கை செய்து   அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றார்.
பெற்றோர் ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பால்கி கூறும்போது, தலைவர். துணை தலைவர் இணைந்து செலவுகளை செய்யக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிதி ஒதுக்கீடு, செலவினங்கள் அனைத்தையும் சமூக தணிக்கை செய்ய வேண்டும். ஜனவரி 26ம் தேதி கிராம சபை கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கண்காணிப்பில் எந்த அரசியல் பாரபட்சமும் இல்லாமல் நடத்துவதற்கு பஞ்சாயத்து சட்டம் வழிவகை செய்கிறது. அதன் அடிப்படையில்  உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய தணிக்கையாளர்களை நியமித்து வேலைகளை எடுப்பதும் செயலாக்குவதும் அவசியம் என்றார். ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சேகர் கூறுகையில், உள்கட்டுமானம் 10 ஆண்டுகளாக தகர்ந்து போயுள்ளது. குடிநீர் பராமரிப்பு, தெருவிளக்குகள், எல்லாவற்றிற்கும் மேலாக குப்பை மற்றும் கழிவுகள் மேலாண்மை அறிவியல் பூர்வமாக மேற்கொள்ள வேண்டும். 2016க்கு பின்னர் பணிகள் அதிகாரிகள் மூலம் நடந்தன. 3 வருடங்கள் வரக்கூடிய சாலைகள் மூன்றே மாதங்களில் பழுதடைந்தன. அவற்றை கவனித்து இனி அது போல் நடக்காமல் தரமான சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

பெண்கள் அதிக அளவில் வெற்றி  பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் ஆளுமை திறனை வெளிப்படுத்த வேண்டும். நிர்வாகத்தில் அவர்களின் கணவர் மற்றும் உறவினர்களை அனுமதிக்கக்கூடாது. மத்திய, மாநில அரசுகளின் நிதி எவ்வளவு வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பெண் உறுப்பினர்களுக்கும், பெண் தலைவர்களுக்கும் உள்ளாட்சி நிர்வாகம் நிதி மேலாண்மை குறித்த  பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். உள் கட்டுமானத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றார். காவிரி படுகை விவசாய சங்கங்களின் பொதுச்செயலாளர் ரவீந்திரன் கூறும்போது,  உள்ளாட்சி அமைப்புகள் நிதி ஆதாரத்தை பலப்படுத்த வேண்டும். நீண்ட காலம் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்க வேண்டும். நீர் நிலை ஆதாரங்களை அளவீடு செய்து முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தண்ணீர் சேமிக்கும் நீர் நிலைகளின் கரைகள் பலவீனமாக உள்ள இடங்களில் பக்கவாட்டு சுவர்கள் அமைக்க வேண்டும்.

கிராமப் புற சாலைகள் தரமில்லாமல் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி ஆதாரத்தை பெற்று சிறப்பான முறையில் சாலைகள் அமைக்க வேண்டும். மேலும் கிராமத்தில் உள்ள பொது மக்களின் வசதிக்கு ஏற்ப தொலை தூரத்தில் உள்ள நியாய விலைக்கடைகளை பிரித்து அந்தந்த பகுதிகளில் பகுதி நேர கடை அமைத்து தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் மாத உதவித்தொகை பெற்றுத்தர வேண்டும். கிராமத்தில் அரசின் திட்டங்கள், ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கக்கூடிய அளவில் வறுமை கோட்டுக்கு கீழே வசிக்கும் உண்மையான நபர்களை அடையாளம் காண கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். சூரிய ஒளி மின்சாரம், அனைத்து கிராமங்களில் இ-சேவை மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு திடல்கள், நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும். அனைவரும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம், அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு உழைத்து தன்னிறைவு மற்றும் பொருளாதார வளர்ச்சி பெற்ற பசுமையான கிராமங்களை உருவாக்க வேண்டும், என்றார்.

Tags : Cuddalore District ,
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!