×

சம்பா பருவ வரத்து விவசாயிகள், வியாபாரிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம், ஜன. 8: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை கடலூர் விற்பனைக் குழு, விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் சம்பா பருவ வரத்து குறித்து விவசாயிகள், வியாபாரிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் ஜெயக்குமார், விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் விற்பனை குழு செயலாளர் ஆறுமுகராஜன் வரவேற்றார்.
வருகின்ற சம்பா பருவ வரத்து குறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அப்போது விவசாயிகள் தரப்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும். பணம் பட்டுவாடா செய்வதில் நாள் கடத்தாமல் உடனேயே வழங்க வேண்டும். விற்பனை கூடத்திற்கு நெல் மூட்டைகளை கொண்டு வருவதற்கான வழித்தடங்களை ஏற்படுத்தி தரவேண்டும்.


மூட்டைகளை கொண்டு வருவதற்கும், விற்பனை செய்த மூட்டைகளை வெளியே கொண்டு செல்வதற்கும் தனித்தனி வழி அமைத்து தரவேண்டும். அரசு நிர்ணயித்த விலையை கொடுக்க வேண்டும். பணம் பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கான காசோலையை வழங்கிட வேண்டும். ஏற்றுக்கூலி, இறக்கு கூலி அரசு வழங்க வேண்டும்.  எடை போடுவதற்கும், மூட்டை மாற்றுவதற்கும் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு குறைகள் மற்றும் கோரிக்கைகளை எடுத்துக் கூறினர்.அதுபோல் வியாபாரிகளும் தங்களுக்கு மூட்டைகளை வெளியே கொண்டு செல்வதற்கு தேவையான இட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இந்த கோரிக்கைகளுக்கான தீர்வு காண்பதில் முழு முயற்சி எடுத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உறுதியளித்தார். கூட்டத்தில், கார்மாங்குடி வெங்கடேசன், ரவீந்திரன், அகர ஆலம்பாடி வேல்முருகன் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் இருநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Tags : Samba Season - Farmers ,Merchants Consolidation Consultative Meeting ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது