×

குடிமகன்களின் மது அருந்தும் இடமாக மாறி வரும் சிதம்பரம் பஸ் நிலையம்

சிதம்பரம், ஜன. 8: சுற்றுலா நகரமாகவும், ஆன்மிக நகரமாகவும் விளங்குவது சிதம்பரம் நகரம். இந்நகரில் உள்ள பஸ் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. கும்பகோணம், நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு சிதம்பரம் நகரம் முக்கிய சந்திப்பாக இருப்பதால் இங்கு தினசரி வரும் பயணிகள் ஏராளம்.ஆனால் பஸ் நிலையத்தில் பயணிகள் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகள் மோசமாகவே உள்ளது. சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு உள்ளேயே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. அதனால் எந்நேரமும் பஸ் நிலையத்தில் பயணிகளை விட குடிமகன்களே அதிகமாக வலம் வருகின்றனர். டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கும் குடிமகன்கள் வேறு எங்கும் வெளியே செல்லாமல், பஸ் நிலையத்தின் மாடி மற்றும் படிக்கட்டுகளில் அமர்ந்து குடிக்கின்றனர். பகல் இரவு என எல்லா நேரங்களிலும் இதுபோன்று பஸ் நிலையத்திற்குள் அமர்ந்து குடிப்பதால் பகுதி முழுவதுமே மது வாடைதான் வீசுகிறது.

இதனால் பஸ்சில் வரும் பயணிகள் முகம் சுளித்தபடியே செல்கின்றனர்.பஸ் நிலையத்தில் அமர்ந்து மது அருந்தும் குடிமகன்கள் சில நேரங்களில் போதை தலைக்கேறி விரும்பத்தகாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் பஸ் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். சிதம்பரம் நகராட்சி நிர்வாகமும், சிதம்பரம் நகர காவல் துறையும் இணைந்து பஸ் நிலையத்திற்குள் குடிமகன்கள் மது அருந்தாமல் தடுக்க வேண்டும் எனவும், பஸ் நிலையத்திற்குள் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chidambaram Bus Stand ,citizens ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...