×

மணல் கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கடலூர், ஜன. 8: கடந்த மாதம் 19ம் தேதி மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன், கிராம உதவியாளர் தவமணி ஆகியோர் மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு மேமாத்தூர் மணிமுக்தாறு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை தடுக்க முற்பட்டபோது லாரியை நிறுத்தாமல் கிராம நிர்வாக அலுவலரை அசிங்கமாக திட்டி, அவர் மீது லாரியை ஏற்ற முயன்றனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன், வேப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கச்சிபெருமாநத்தம் சிவக்குமார்(27) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், சிவகுமார் மீது வேப்பூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும், எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் மணல் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்றதும் தெரியவந்தது. இவரது குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் பரிந்துரையின் பேரில், சிவக்குமாரை ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர்  அன்புச்செல்வன் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட சிவக்குமார், ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது