×

குமரியில் ஒதுக்கீடு பாதியாக குறைப்பு ரேஷனில் இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல் லோடு இறக்க ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

நாகர்கோவில், ஜன.8:  பாதிக்கு, பாதி தான் வேட்டி, சேலை வந்துள்ளதால் ரேஷனில் வேட்டி, சேலைகள் வினியோகிக்க மாட்டோம் என்று ஊழியர்கள் கூறி உள்ளனர். ரேஷன் கடைக்கு வந்த வேட்டி, சேலை மூடைகளை இறக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்பட உள்ளன. வழக்கமாக அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் தான் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த வருடத்தில் இருந்து திடீரென, ரேஷன் கடைகள் மூலம் இலவச வேட்டி, சேலைகள் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் ரேஷன்கார்டுகளுக்கு ஏற்ப வேட்டி, சேலைகள் இல்லாததால் பல இடங்களில் பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் தகராறு செய்தனர். ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன. எனவே இந்த ஆண்டு முறைப்படி வேட்டி, சேலை ஒதுக்கீடு இருந்தால் தான் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்வோம் என்று தமிழ்நாடு பொது வினியோக ஊழியர்கள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் சராசரியாக 4 லட்சத்து 64 ஆயிரத்து 300 சேலைகளும், 4 லட்சத்து 62 ஆயிரத்து 351 வேட்டிகளும் தேவைப்படும். ஆனால் அதற்கேற்ப வேட்டி, சேலைகள் வழங்கப்பட மாட்டாது.  எனவே இந்த முறை ரேஷன் கடை ஊழியர்கள் வேட்டி, சேலைகள் உரிய ஒதுக்கீடு இருந்தால் மட்டுமே, ரேஷன் கடைகளில் வினியோகிப்போம் என தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வடிவீஸ்வரத்தில் உள்ள, விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் இயங்கும் ரேஷன் கடைக்கு வேட்டி, சேலை லோடு வந்தது. அப்போது அங்கிருந்த தமிழ்நாடு பொது வினியோக ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் குமரி செல்வன், இந்த கடையை பொறுத்தவரை 998 ரேஷன் கார்டுகள் உள்ளன. ஆனால் 600 வேட்டி, சேலைகள் தான் கொண்டு வந்து இருப்பதாக கூறுகிறீர்கள். எனவே வேட்டி, சேலையை இங்கு இறக்கி வைக்க அனுமதிக்க மாட்டோம். அப்படியே இறக்கி வைக்க வேண்டுமானால் எத்தனை வேட்டி, சேலை வந்துள்ளது என்பதை எழுத்து பூர்வமாக தந்து, யார், யாருக்கெல்லாம் வினியோகம் செய்ய வேண்டும் என்றும் எழுதி தர வேண்டும். அதன் பின்னரே வேட்டி, சேலைகளை வினியோகிப்போம் என்றார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வேட்டி, சேலை இறக்கி வைக்க முடியாமல் திணறினார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கோட்டார் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து வட்ட வழங்கல் அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது வேட்டி, சேலையை இறக்கி வைக்க மட்டும் இடமளிக்க வேண்டும் என்றும், எப்போது யார் மூலம் வினியோகம் செய்ய வேண்டும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். பின்னர் அதிகாரிகள் இறக்கி மட்டும் வைக்கப்படும் வேஷ்டிகள், சேலைகளின்   எண்ணிக்கையை குறிப்பிட்டு அந்த ரேஷன் கடையில் வைத்தனர். இதே போல் பல்வேறு ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வினியோகிக்க மாட்டோம் என்று ஊழியர்கள் கூறி உள்ளனர்.

இது குறித்து பொது வினியோக ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் குமரி செல்வன் கூறுகையில், 1000 ரேஷன் கார்டுகள் உள்ள கடைக்கு 600 வேட்டி, சேலை தான் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு கார்டுக்கும் வேட்டி, சேலை வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர் ெகாள்ளையடித்து விட்டதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். அதிகாரிகள் தரப்பில், பொய்யான தகவல்களை இயந்திரங்களில் பதிவு செய்கிறார்கள். ரேஷன் கார்டுகளுக்கு ஏற்ப வேட்டி, சேலை வழங்குகிறோம் என்று பதிவு செய்து விட்டு பாதிக்கு மேல் தருவதில்லை. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் தான் பொதுமக்களிடம் திட்டு வாங்க வேண்டி உள்ளது. பலர் தாக்கவும் செய்கிறார்கள். எனவே தான் அதிகாரிகளே முடிவு செய்து எழுத்து மூலமாக அந்தந்த ரேஷன் கடைகளுக்கு இவ்வளவு வேட்டி, சேலைகள் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே அதற்கேற்ப வினியோகிக்கப்படும். பெறாதவர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என்ற உறுதியை தந்தால் தான் ரேஷனில் வேட்டி, சேலை வினியோகிக்கப்போம் என்றார்.

Tags : death ,Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...