×

குமரியில் இருந்து கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவில், ஜன.8:  தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கிய நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஏஐடியுசி, சிஐடியு, ஏஐயுடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட பல்வேறு மத்திய தொழிலாளர் சங்கங்கள் தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 24 மணி நேர பொதுவேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க தொடங்கியுள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், காப்பீட்டுத் துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க இருப்பதாக தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த போராட்டத்தில் பெருமளவு ஆசிரியர்களும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதே வேளையில் ஜனவரி 8ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார். 8ம் தேதி தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது. அன்று பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுவேலைநிறுத்தம் காரணமாக குமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரளாவில் முழு அளவில் போராட்டம் நடைபெறும் என்பதால் அங்கு ஏற்கனவே தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வங்கித்துறையில் பணியாளர்கள் வருகை குறைவால் பணிகள் இன்று பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனை போன்று பிஎஸ்என்எல், தபால்துறையிலும் ஊழியர்கள் வருகை குறைவாக இருக்கும். அரசு போக்குவரத்து கழகத்தில் தொழிற்சங்கங்கள் சார்ந்த ஈடுபாடு உள்ளவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் ஆட்டோ, டாக்சிகள் இயக்கம் குறைவாக காணப்படும். ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவேலை நிறுத்த போராட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே இன்று (8ம் தேதி) புதன்கிழமை காலை 10 மணிக்கு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. மேலும் இன்று பகல் 12 மணி முதல் 12.10 வரை 10 நிமிடங்கள் அனைத்து வாகனங்களையும் சாலைகளில் நிறுத்தி பொதுமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த கட்சியினரும், தொழிற்சங்கங்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kumari ,Kerala ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து