×

குமரியில் 3 வார்டுகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை காலை 10 மணிக்கு தக்கலை மையத்தில் நடக்கிறது

நாகர்கோவில், ஜன.8: வேட்பாளர் பெயர்கள் கடைசி நேரத்தில் நீக்கம் காரணமாக முடிவு அறிவிக்கப்படாமல் இருந்த குமரி மாவட்டத்தில் உள்ள 3 வார்டுகளுக்கு இன்று (8ம் தேதி) காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் பெயர்கள் பரிசீலனை, வாபஸ் போன்றவற்றுக்கு பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  சின்னம் ஒதுக்கப்பட்டு தேர்தல் நடந்தது. ஆனால் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலில் தமிழகம் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் பெயர்கள் திடீரென்று நீக்கப்பட்டது. அவ்வாறு நீக்கப்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் வாக்களிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு  வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்திருந்தனர். இந்நிலையில் கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில் துணை வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வாக்குகளை எண்ண வேண்டாம். அதனை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் ஆணையம் முதலில் சுற்றறிக்கை அனுப்பி வைத்தது.

குமரி மாவட்டத்தில் கணியாகுளம் ஊராட்சி 9 வது வார்டு வேட்பாளர் ராபின், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் அமமுகவை சேர்ந்த ராஜன் (சுயே), குருந்தன்கோடு ஒன்றிய குழு உறுப்பினர் சுகந்தி (பா.ஜ) ஆகியோரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதனால் இந்த வார்டுகளில் ஜனவரி 2ம் தேதி முடிவு அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று (8ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் முடிவு அறிவிக்கப்படாமல் உள்ள 3 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கையும் தக்கலை அருகே புங்கறையில் உள்ள என்ஐ பாலிடெக்னிக் கட்டிடத்தில் ஒரே இடத்தில் வைத்து நடைபெற உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags : Kumari ,Takalai Center ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!