×

அருமனை பொங்கல் விழா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் பங்கேற்கிறார்

அருமனை, ஜன. 8: 16வது அருமனை பொங்கல் விழா ஜனவரி 11, 12ம் தேதிகளில் நடக்கிறது. தெலங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அருமனை வட்டார இந்து சமுதாயமும், ஆலய நிர்வாகங்களும் இணைந்து நடத்தும் 16வது பொங்கல் விழா மற்றும் கலாச்சார ஊர்வலம் வருகிற 11 மற்றும் 12ம் தேதிகளில் நடக்கிறது. 11ம் தேதி காலையில் கணபதி ஹோமம், பொங்கலிடும் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. மாலையில் நடைபெறும் அனைத்து இந்து சமுதாய மாநாட்டிற்கு செல்லன் தலைமை வகிக்கிறார். விழாக்குழு நிர்வாகிகள் மோகன்தாஸ், வித்தியாதரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பாஞ்சாலி அம்மா, வள்ளி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றுகின்றனர். அபிராமி, நந்திதா ஆகியோர் இறைவணக்கம் பாடுகின்றனர். சமய வகுப்பு அமைப்பாளர் பொன்.டென்னிஸ் வரவேற்றுப் பேசுகிறார். புலவர் ரவிந்திரன் தொடங்கி வைத்துப் பேசுகிறார். இந்து சமுதாய பிரமுகர்களான சாந்தப்பன் நாயர், சுரேஷ், செல்வராஜ், வேலப்பன், ஜனார்த்தனன் கொச்சுமணிகாணி, புலவர் ராஜேந்திரன், வாமதேவன் நாயர், கமலன்நாடார், ஐயப்பன்பிள்ளை, பழனி ஆசாத் நடராஜன், சிவகுமார் ஆகியோர் பேசுகின்றனர். தொடர்ந்து சுவாமிதோப்பு  சிவச்சந்திரன் குழுவினரின் ஆன்மிக நிகழ்ச்சி நடக்கிறது. சுனில்குமார் நன்றி கூறுகிறார்.

இரண்டாவது நாள் மாலையில் புண்ணியம் அய்யா நிழல் தாங்கலில் இருந்து யானைகள், குதிரைகள், மாட்டு வண்டிகள், காவிக்கொடிகள், முத்து குடைகள் அணிவகுக்க 500க்கும் மேற்பட்ட கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கலாச்சார ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு விழாக்குழு தலைவர் டி.விஜயகுமார் தலைமை வகிக்கிறார். சுமதி மனோகரன் குத்துவிளக்கு ஏற்றுகிறார். விழாக்குழு அமைப்பாளர் மதன் வரவேற்றுப் பேசுகிறார். வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்த மகராஜ் ஆசி கூறுகிறார். தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர். தமிழிசை சவுந்தர்ராஜ் விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். அகில இந்திய துறவிகள் சங்கத் தலைவர் சுவாமி ராமானந்தா, ரிஷிகேஷைச் சேர்ந்த சுவாமி ராமதேவானந்தா, சுவாமி ராகவேந்திரா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ. தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஆர்எஸ்எஸ் நிர்வாகி முத்துக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.

Tags : Governor ,Tamil Nadu Soundararajan ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...