×

குமரி எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் 300 பேருக்கு மேல் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில், ஜன.8 : நாகர்கோவிலில் மோசடி நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 300க்கும் மேற்பட்டவர்கள் எஸ்.பி. ஆபீசில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டத்தில் மோசடி நிதி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. ஆசை வார்த்தைகள் கூறி மக்களை ஏமாற்றி வருடக்கணக்கில் பணம் வசூலித்து, முதிர்வு காலத்துக்கு பின் பணத்தை கொடுக்காமல் ஏப்பம் விடும் நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட பலர், பணம் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் எம்.எஸ். ரோட்டில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து விட்டு, மூடப்பட்டுள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் தக்கலை, குலசேகரம், குளச்சல், சுசீந்திரம், தேரூர், ராமன்புதூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் பணம் கட்டி உள்ளனர். இவ்வாறு பணம் கட்டி ஏமாந்து போன நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க குவிந்தனர். தங்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றியவர்களை உடனடியாக கைது செய்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எஸ்.பி. அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த அதிரடிப்படை போலீசார் அவர்களை உள்ளே  விடாமல் தடுத்தனர். கோட்டார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். புகார் மனுக்களை ஒட்டு மொத்தமாக வாங்கி, குறிப்பிட்ட சிலர் மட்டும் எஸ்.பி.யை சென்று சந்திக்கலாம் என போலீசார் கூறினர்.
இதையடுத்து பொதுமக்களை தலைமை தாங்கி அழைத்து வந்த ஆதி திராவிடர் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவன தலைவர் ஜாண் விக்டர் தாஸ் உள்ளிட்ட சிலர், எஸ்.பி.யை சந்தித்தனர். இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எஸ்.பி. கூறினார். இதையடுத்து புகார் மனுக்கள் அனைத்தும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. டி.எஸ்.பி. முத்துப்பாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி இதில் வழக்கு பதிவு செய்வார்கள் என கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நிறுவனம், நிலங்களை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறி உள்ளனர். இதற்காக நிலம் கொள்முதல் தவணை  திட்டம் என்ற பெயரிலும், மாதந்தோறும் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்துள்ளனர். 3 மாதங்களுக்கு ஒருமுறை, 6 மாதங்களுக்கு ஒருமுறை என்ற வகையில் பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. ரூ-300ல் இருந்து ரூ.5 ஆயிரம் வரை மாதந்தோறும் பணம் செலுத்தியவர்களும் உள்ளனர். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்சு பாலிசி திட்டமும் இருப்பதாக கூறி உள்ளனர்.  கிராமங்களுக்கு நேரடியாக சென்று பணம் வசூலிக்க ஏஜெண்டுகளையும் வைத்துள்ளனர். பணம் வசூலித்து கொடுத்த ஏஜெண்டுகளும், நேற்று எஸ்.பி. அலுவலகம் வந்தனர். ஏஜெண்டுகளுக்கு மாத சம்பளம் தவிர, மாதந்தோறும் டார்க்கெட் (இலக்கு) நிர்ணயம் செய்து, அந்த இலக்கை அடைந்த ஏஜெண்டுகளுக்கு பரிசு பொருட்கள் கொடுத்துள்ளனர். வாடிக்கையாளர்கள், ஏஜெண்டுகள் கூட்டம் நடத்தி பரிசு பொருட்கள், விலை உயர்ந்த சாப்பாடு வழங்கி உள்ளனர். தற்போது இதன் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர்களாக இருந்தவர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் பிடிபட்டால் தான் மேற்கொண்டு விவரம் தெரிய வரும் என போலீசார் கூறி உள்ளனர்.

Tags : SP ,Kumari ,
× RELATED போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற...