×

ஏனம்பாக்கம் கிராமத்தில் சேறும் சகதியுமான அரசு மருத்துவமனை சாலை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை, ஜன. 7:   ஏனம்பாக்கம் கிராமத்தில் குண்டும், குழியும் சேறும் சகதியுமாக மாறிய அரசு  மருத்துவமனை சாலையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் ஏனம்பாக்கம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், பள்ளி மாணவ - மாணவிகள்  என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.   இவர்களுக்கு உடல் நலக்குறைவு, கர்பிணிகளுக்கு சிகிச்சை என பல்வேறு நோய்களுக்கு வெங்கல் மற்றும் பெரியபாளையம் பகுதிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

இதனால் ஏனம்பாக்கம் பகுதியில் மருத்துவமனை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கடந்த 2011ம் ஆண்டு அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.  இப்பகுதி  மக்கள் இங்கேயே சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இந்த மருத்துவமனைக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் மாறிவிட்டது. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே  மருத்துவமனைக்கு செல்லும் சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

Tags : Government Hospital Road ,Enampakkam Village ,
× RELATED பெரியபாளையத்தில் சேறும் சகதியுமான அரசு மருத்துவமனை சாலை