×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம், ஜன.7: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில்  அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் அஷ்டபுஜம் பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதேபோல் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், வைகுண்ட பெருமாள், அழகிய சிங்கப்பெருமாள், பச்சைவண்ண பெருமாள், பவளவண்ண பெருமாள், உலகளந்தார் பெருமாள், விளக்கொளி பெருமாள், சொன்னவண்ணம் செய்த பெருமாள், பாண்டவர் சமேத பெருமாள், நிலாத்துண்டர், ஆதிகேசவ பெருமாள், திருநீரகத்தான் ஆகிய திவ்ய தேசங்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த நாளில் பெருமாளை வழிபட்டால் சொர்க்கத்துக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் ஆனந்தவல்லி நாயகி சமேத சுந்தரவரதராஜ பெருமாள், திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாள், மதுராந்தகம்  ஏரி காத்த ராமர் கோயில், மாமல்லபுரம் தலசயன பெருமாள், பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள், சிங்க பெருமாள் கோயிலில் உள்ள நரசிங்க பெருமாள், ஞான தேசிங்க பெருமாள் மற்றும் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் ஆகிய கோயில்கள் உள்பட கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், கேளம்பாக்கம் உள்பட பல பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்பாக்கம் நகரிய குடியிருபபில் உள்ள அங்காள பரமேஸ்பவரி ஆலய வளாகத்தில் உள்ள பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் குடியிருப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

Tags : temples ,Kanchipuram ,Perumal ,Chengalpattu ,devotees ,districts ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு