×

வேலூர் சத்துவாச்சாரியில் பெட்ரோல் திருடும் கும்பல் அட்டகாசம்

வேலூர், ஜன.7: வேலூர் சத்துவாச்சாரியில் சமீப காலமாக பெட்ரோல் திருடும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வேலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, காட்டன் சூதாட்டம், ஆள் கடத்தல், மணல் கடத்தல், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏராளமானோர் போலீசாரின் வலையில் சிக்காமல் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதில், பெரும்பாலான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இதுநாள் வரையிலும் கைது செய்யப்படவில்லை. இதனால் குற்ற சம்பவங்களுக்கு முடிவுரை இல்லாமல் தொடர்ந்து வருகிறது. இத்தகைய பாதுகாப்பற்ற சூழ்நிலையால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் வேலூர் சத்துவாச்சாரியில் புதுவகையான திருட்டுக்கள் அரங்கேறி வருகிறது. தற்போது வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்படும் பைக்குகளில் பெட்ரோல் திருடும் சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வேலூர் சத்துவாச்சாரி ‘எல்’ டைப் குடியிருப்பை சேர்ந்த மக்கள் கூறுகையில், ‘100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். வீட்டின் உள்ளே பைக்குகள் நிறுத்த போதியளவில் இடவசதி இல்லாததால் பைக்குகளை வெளியே நிறுத்துவது வழக்கம். திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் பைக்கின் சக்கரங்களுக்கு இரும்பு சங்கிலியைக் கொண்டு பூட்டிவிட்டு செல்கிறோம். எங்கள் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. மலையடிவாரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் யார் வந்து செல்கிறார்கள் என்பது தெரியாது.

இதனை பயனபடுத்திக் கொள்ளும் மர்ம நபர்கள் வாகன திருட்டை கைவிட்டு சமீப காலமாக பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் உள்ள வாகனங்களில் தினமும் பெட்ரோல் திருடப்படுகிறது. திருட்டு கும்பலை கையும் களவுமாக பிடிக்க பலமுறை முயற்சித்தும் மர்ம நபர்கள் சிக்கவில்லை. ஆனால், பெட்ரோல் திருட்டு சம்பவங்கள் மட்டும் தொடர்கிறது. இதனால் பைக்குகளில் பெட்ரோல் நிரப்ப தயக்கமாக உள்ளது. மேலும், இதுபோன்று மர்ம நபர்களின் நடமாட்டம் பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, பெட்ரோல் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு ரோந்துப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் சுற்றித்திரிந்து பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : gang ,Vellore Satwachari ,
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...