×

வண்டாம்பாளையம் ஊராட்சி வாக்கு எண்ணும் பெட்டியை முகவர்கள் இல்லாமல் திறந்ததை கண்டித்து மக்கள் போராட முயற்சி

திருவாரூர், ஜன. 7: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு செல்வி, சூரிய லெட்சுமி, சரஸ்வதி மற்றும் பானுமதி ஆகியோர் போட்டியிட்ட நிலையில் கடந்த 2ம்தேதி அம்மையப்பன் அரசு மேல்நிலை பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்படி ஊராட்சி வாக்கு பெட்டியை எண்ணுவதற்காக முகவர்களுக்கு காலை 10 மணி முதல் 11 மணி வரையில் நேரம் குறிப்பிடப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதற்காக முகவர்கள் அனைவரும் அங்கு காலை 9 மணியளவிலேயே காத்திருந்த நிலையில் ஆளும் கட்சியை சேர்ந்த முகவர்கள் மட்டும் முன்கூட்டியே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு பிற வேட்பாளர்களின் முகவர்கள் இல்லாமல் வாக்கு பெட்டி திறக்கப்பட்டு எண்ணப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அப்போதே பிற வேட்பாளர்களின் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து ஆளும் கட்சி ஆதரவு கொண்ட வேட்பாளர் செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து பிற வேட்பாளர்களான சூரியலட்சுமி, சரஸ்வதி மற்றும் பானுமதி ஆகியோர் மற்றும் கிராம மக்கள் என சுமார் 500க்கும் மேற்ப்பட்டவர்கள் நேற்று மாலை தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசின் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வண்டாம்பாளையத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். இதனையடுத்து நடுவழியில் நன்னிலம் போலீஸ் டி.எஸ்.பி சுகுமார், தாசில்தார் திருமால் ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். மேலும் மேற்படி ஊராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் என்பவரும் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டார். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்றும், அப்போது இது குறித்து ஆவணங்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்படும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் வாசுதேவன் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : opening ,Vandampalayam ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா