×

ஒக்கநாடு மேலையூரில் 100 ஏக்கரில் சாகுபடி செய்த சம்பா நெற்பயிர்கள் பாதிப்பு

ஒரத்தநாடு, ஜன. 7: ஒரத்தநாடு அடுத்த ஒக்கநாடு மேலையூரில் 100 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த சம்பா நெற்பயிர்கள் பதராகி வருகிறது. இந்த வயல்களில் வேளாண் அதிகாரிகள் இன்று பார்வையிடவுள்ளனர். ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் சம்பா நெல் சாகுபடியை அதிகளவில் விவசாயிகள் செய்திருந்தனர். தற்போது 100 ஏக்கரில் நெற்பயிர்கள் சாம்பல் நிறமாக மாறி பதராகி விட்டது. இதை பார்த்து விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும் தஞ்சை மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டினிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று வேளாண்துறை அதிகாரி தலைமையிலான குழுவினர் விவசாயிகளின் சம்பா நெல் சாகுபடியை இன்று பார்வையிட முடிவு செய்துள்ளனர். இந்த பாதிப்பு தண்ணீரால் ஏற்பட்டுள்ளதா, மண்ணால் ஏற்பட்டுள்ளதா அல்லது நோய் தாக்கப்பட்டு உள்ளதா என்ற வகையில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபடவுள்ளனர்.

அரசின் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஒரத்தநாடு பகுதியான ஈச்சங்கோட்டை யில் அமைந்திருந்தும் கூட ஆராய்ச்சியாளர்கள் யாரும் விவசாயிகளை பேரழிவில் இருந்து காப்பாற்றுவதற்கு இதுவரை முயற்சி மேற்கொள்ளவில்லை. ஒரத்தநாடு வேளாண் துறை அலுவலக அதிகாரிகளும் இதுவரை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு இருக்கிற பகுதிக்கு சென்று ஆய்வு செய்யவும் இல்லை. எனவே இந்த பகுதியில் சம்பா நெல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது விவசாயிகளுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Samba ,
× RELATED தஞ்சாவூர் அருகே கோடைநெல் சாகுபடி தீவிரம்