×

மருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்

தஞ்சை, ஜன. 7: மருங்குளம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டுமென தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் வேட்பாளர், பொதுமக்கள் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர். மருங்குளம் நேரு தெருவை சேர்ந்த சரவணன் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு: மருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ஆட்டோ ரிக்க்ஷா சின்னத்தில் போட்டியிட்டேன். என்னையும் சேர்த்து 4 பேர் போட்டியிட்டனர். தேர்தலின்போது மொத்தம் 2,672 வாக்குகள் பதிவானது. ஆனால் 2ம் தேதி வாக்கும் எண்ணும் மையத்தில் 2,664 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டது. 8 வாக்குகளை காணவில்லை. மேலும் 116 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. அதில் தேர்தல் விதிமுறைகளின்படி 42 வாக்குகள் செல்லத்தக்கவையாகும். மீதமுள்ள வாக்குகளை எண்ணியபோது 853 வாக்குகளை பெற்ற நான் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறினர். மேலும் சான்றிதழை பிறகு வந்து வாங்கி கொள்ளுமாறு கூறியதாலும், இரவு 2 மணி என்பதாலும் நானும், முகவர்களும் வாக்கும் எண்ணும் மையத்தை விட்டு வெளியே வந்து சாப்பிட சென்று விட்டோம். மேலும் தோற்றுபோன மற்ற 3 வேட்பாளர்களும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

பிறகு நான் சான்றிதழ் வாங்க சென்றபோது சுமார் ஒரு மணி நேரம் என்னை காக்க வைத்த பின் 6 வாக்கு வித்தியாசத்தில் தோற்ற வேட்பாளர் வீட்டுக்கே சென்றிருந்த நிலையில் அவரை ஆள்விட்டு கூப்பிட்டு வர செய்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர். எனக்கு வழங்க வேண்டிய சான்றிதழை அவருக்கு மாற்றி வழங்கியுள்ளனர். இதை அங்கேயே நானும் எனது வாக்கு எண்ணும் முகவர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தோம். மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என கோரியும் அதை நிராகரித்தனர். எனவே வெற்றி பெற்ற எனக்கு சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அளித்த மனு: புத்தகரம் ஊராட்சி ஆதிதிராவிடர் வகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இடமாகும். இதில் சத்யா ஞானசிகாமணி என்ற கிறிஸ்தவ பெண் நின்று தவறான சான்று வழங்கி வெற்றி பெற்றுள்ளார். எனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு ஆணையை மீறி நின்று வெற்றி பெற்றதற்கு தடை விதிக்க வேண்டும். நியாயமாக ஒதுக்கப்பட்ட ஆதிதிராவிடர் இடத்தை மீண்டும் ஒதுக்கி தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிவசேனா கட்சியின் மாநில துணை தலைவர் புலவஞ்சி போஸ் அளித்த மனு: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியம் புலவஞ்சி கிராமத்தில் பதிவான வாக்குகள் 1,752. வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்கு பெட்டியை திறக்க சென்றபோது அப்பெட்டி ஏற்கனவே திறந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு வார்டு வாரியாக வாக்கு எண்ணப்பட்டது. ஆனால் புலவஞ்சி கிராமத்திற்கு மட்டும் வார்டு வாரியாக எண்ணாமல் மொத்தமாக வாக்குச்சீட்டுகளை கலந்து எண்ணினர். மொத்தம் இருந்த 5 வேட்பாளர்களில் 4 பேர் தவறான வாக்கு எண்ணிக்கை நடக்கிறது என கூறி எதிர்ப்பு தெரிவித்து விட்டு வெளியேறி விட்டனர். இதை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் மற்ற வேட்பாளர்கள், முகவர்கள் சம்மதமின்றி ஒருதலைப்பட்சமாக வேட்பாளர் பானுமதி வெற்றி பெற்றார் என அறிவித்து விட்டனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. 10 வாக்குகள் காணாமல் போய்விட்டதாகவும் கூறினர். இது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை. இது மக்களாட்சி முறையை கேலி கூத்தாக்கியுள்ளது. எனவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவித்து ஜனநாயகத்தை காத்து மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொது செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் அளித்த மனு: தஞ்சை பெருவுடையார் கோயிலில் பிப்ரவரி 5ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்நேரத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் கடந்த 4ம் தேதி 10க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் கோயிலின் உள்ளே அத்துமீறி நுழைந்து ஆபாசமாக நடந்துள்ளனர். ஆனால் கோயில் நிர்வாகிகள் யாரும் தட்டி கேட்கவில்லை. இதுபோல் பக்தர்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து வருவதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய போக்கோடு பணியாற்றிய பெரிய கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர், கண்காணிப்பாளர் மற்றும் அச்சமயத்தில் கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Marungulam ,Panchayat leader ,
× RELATED அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் ஊராட்சி...