×

நாகை அருகே பொங்கல் அடுப்புகள் தயார் செய்யும் பணி மும்முரம்

நாகை, ஜன.7: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பொங்கல் அன்று வீடுகளில் மண் அடுப்புகளில் மண் பானைகளை கொண்டு பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கமாகும். நகரம், கிராமம் என்ற பாகுபாடு இன்றி அனைத்து குடும்பங்களிலும் பொங்கலிடுவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது--. பொங்கல் பண்டிகையையொட்டி மண் அடுப்பு, மண் பானைகளின் விற்பனை அதிகரிக்கும். நாகை அருகே பாப்பாகோவிலில் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் அடுப்பு தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் சிறிய அளவிலான மண் அடுப்புகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து நாகை பாப்பாகோவிலை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: இந்த பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மண்பாண்ட தொழில் நடந்து வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி அதிகளவிலான மண் அடுப்புகள் தயாரிக்கப்படுகிறது. ஒரு அடுப்பு ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அடுப்புகளை தயாரிக்க அருகில் உள்ள குளத்தில் இருந்து மண் எடுக்கிறோம். இதையடுத்து மணல், களிமண், உமி ஆகியவற்றை கலைவை செய்து அதை வைத்து அடுப்பு தயாரிக்கிறோம்.

இவ்வாறு தயாரித்த அடுப்புகளை சூளையில் வைத்து தகுந்த பக்குவத்தில் வைத்து சுடப்படுகிறது. சில நேரங்களில் வானம் மேகமூட்டமாக இருந்தால் அடுப்பு தயாரிக்க சூளை போடமுடியாது. ஒரு நபர் அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு 30 அடிப்பு வரை மட்டுமே தயாரிக்க முடியும். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு நபர் ஒரு வாரத்துக்குள் 500 அடுப்புகள் வரை தயாரிக்க இலக்கு வத்துள்ளோம். பொங்கல் பண்டிகை என்பதால் ஒரு அடுப்பு தற்போது ரூ. 60 மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நாகை கடைத்தெருவிலும் கொண்டு சென்றும் விற்பனை செய்கிறோம். முன்பு உள்ளது போல் போதிய வருமானம் தற்போது மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் அடுத்து வரும் தலைமுறையினர் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர். இதனால் நாகை பகுதியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே மண்பானை செய்யும் தொழிலாளர்கள் உள்ளனர். இருப்பினும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான வியாபாரிகள் எங்களை நம்பி ஆர்டர் கொடுக்கின்றனர். இதற்காக பானைகள் தயாரிக்க அதிகமாக உழைக்கிறோம். ஆனால் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. மண் பானை, மண்சட்டி சமையலுக்கு மக்கள் மாறினால் எங்கள் வாழ்வாதாரம் மேம்படும். மழைக்காலம் என்றால் தொழில் முற்றிலுமாக பாதிக்கப்படும். இதில் அதிக அளவு வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம். எனவே இந்த தொழிலை நசுங்காமல் பாதுகாக்க தொழிலாளர்களுக்கு அரசு மானியம் மற்றும் மழைக்காலங்களில் போதிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றனர்.

Tags : Naga ,
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...